தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகள் அரச உயர்மட்டத்தில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, அடுத்த நவம்பரில் முன்வைக்கவுள்ள வரவு செலவுத்திட்ட உரையின் பின்னர் இதற்கான அழைப்பினை நாடாளுமன்றத்தில் வைத்தே விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது,
அதிவேக நெடுஞ்சாலை உட்பட சில அபிவிருத்தித் திட்டங்களை அமெரிக்காவுக்கு வழங்க நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ முன்னர் திட்டமிட்ட போதிலும் அத்திட்டத்திற்கெதிராக எழுந்து செயற்பட்ட விமல் அணியினர் தற்போது கெரவலப்பிட்டிய திட்டத்திலும் தலையிட்டு குழப்பியுள்ளமை அமைச்சர் பஸிலுக்கு கடும் ஆத்திரத்தை வரவழைத்திருப்பதாக கூறப்படுகின்றது,
இந்த தடவை விமல் அணியினர் கடுமையான போராட்டங்களை நடத்த எதிர்பார்க்கின்ற நிலையில், அவ்வாறு தொழிற்சங்கங்களை வீதிக்கு இறக்கி போராட்டம் நடத்தினால் விமல் அணியை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் பஸில் உத்தேசித்திருப்பதாக தெரியவருகிறது.
அவர்களுக்குப் பதிலாக “நாட்டிற்கான தேவை” என்ற பெயரினைக் குறிப்பிட்டு வழக்குகளில் சிக்கியுள்ள எதிரணி உறுப்பினர்களை தம்வசம் இழுப்பதற்கும் அவர் தயாராகி வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தரப்பினரை சேர்த்துக் கொள்வது பற்றி நெலும்மாவத்தை தலைமையகம் அவதானம் செலுத்தியுள்ளது.
இருப்பினும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டினை மீண்டும் அரசாங்கத்தில் சேர்க்காதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவே சொல்லப்படுகின்றது. எனினும் அவரின் கட்சி உறுப்பினர்கள் இப்போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.