மே மாதத்திலிருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு தொற்றுநோயாக உருவாகக் கூடும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
தற்போது பெய்து வரும் பருவ மழையுடன் இந்த தொற்று நிலைமை தீவிரமாகக் கூடும் என அதன் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் டெங்கு அபாயத்துடன் கூடிய பதினைந்து (15) மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், புத்தளம், பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வருடத்தில் இதுவரை இருபத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபது டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இம்மாதத்தின் கடந்த இரண்டு நாட்களில் நூற்று ஆறு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது வேகமாக அதிகரித்து வருவதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.