நாட்டில் நேற்று(17) பிற்பகல் முதல் பல்வேறு பாகங்களில் திறக்கப்பட்ட மதுபானசாலைகள் இன்று முற்பகல் வேளைகளிலும் திறக்கப்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில், இவ்வாறு மதுபானசாலைகள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதையடுத்து, இரவு நேரம் வரையில் மதுபானசாலைகளுக்கு முன்னாள், தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை கருத்திற்கொள்ளாமல், பெருமளவானோர் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
எனினும் மதுபானசாலைகளை திறப்பதற்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என மதுவரித் திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தது.
அதேநேரம், இன்றைய தினமும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு, மதுபானங்களை விநியோகிப்பதற்காக பாரவூர்திகள் பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது.
நாட்டில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை உரியவாறு நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.