எதிர்வரும் செப்டெம்பர் 22 (புதன்) முதல் ஐக்கிய இராஜ்ஜியத்தின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 22 அதிகாலை 4 மணி முதல், இலங்கை இனி ஐக்கிய இராஜ்ஜியத்தின் கொவிட்-19 ‘சிவப்பு பட்டியலில்’ இருக்காது.
இந்த அறிவிப்பு செப்டம்பர் 17 அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொவிட் -19 பயண விதிமுறைகளுக்கான இணையவாழி வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி புதன்கிழமை முதல் எட்டு நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறினார்.
துருக்கி, பாகிஸ்தான், மாலத்தீவு, எகிப்து, இலங்கை, ஓமன், பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய எட்டு நாடுகளே இவ்வாறு சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்லும் தடுப்பூசி போட்டப்பட்ட பயணிகளுக்கு, புறப்படுவதற்கு முன்னரான பி.சி.ஆர். சோதனை முடிவுகள் இனி தேவைப்படாது.
அத்துடன் அவர்களுக்கு இனி சொந்த செலவில் 10 நாள் கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் இருக்காது.
எனினும் பிரிட்டன் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் கீழ் தடுப்பூசி போடப்படாத பயணிகள், 10 நாள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலை முடித்து, தனிமைப்படுத்தலின் எட்டாவது நாளில் அல்லது அதற்குப் பிறகு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள வேண்டும்.