பொலிஸாரால் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி, நிஹால் தல்துவ தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு நேற்றிரவு 12.00க்கும் 1.00 மணிக்கும் இடையில் அப்பகுதியில் உள்ள சூதாட்ட நிலையம் ஒன்றை சோதனையிட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.
பொலிசார் அங்கு சென்றதும் சூதாட்ட நிலையத்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்ய முயன்ற போது பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது துப்பாக்கி இயங்கியதில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  


                                    




