கைரியா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 11-ம் திகதி சுகததாச விளையாட்டு அரங்கில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் (21) கொழும்பு 9ல் அமைந்துள்ள கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இலச்சினையும் விளையாட்டுப் போட்டியின் சீருடை மற்றும் வெற்றிக்கேடயங்கள் அறிமுக நிகழ்வும் கல்லூரி அதிபர் திருமதி ஏ எல் எஸ் நசீரா ஹசனார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதிபர்
திருமதி ஏ எல் எஸ் நசீரா ஹசனார், பாடசாலையின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் குறிப்பிட்டதோடு மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் சிறப்பு பெற இந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் உறுதுணையாக இருக்கும் என்றார்.
மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் உப அதிபர் மற்றும் விளையாட்டுக்களுக்கான பொறுப்பாசிரியர் திருமதி பர்ஹானா அமிர்தீன் மற்றும் கல்லூரியின் விளையாட்டுத் தலைவர் செல்வி ரஷா சப்ராஸ் ஆகியோரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் இந்நிகழ்வை பிரதி மாணவ தலைவர் செல்வி சாரா நிலாம்டீன் தொகுத்து வழங்கியதோடு இந்நிகழ்வில் மாணவர் தலைவர் சாரா அரபாத்,
இல்லங்களின் தலைவர்களான ரஹமா பானு, ஜெஸ்மின் இப்திகார், அகிலா உசேன், பரஹா ஃபாரீட்.ஆகியோருடன் மாணவர் தலைவர் செயற்குழு உறுப்பினர்களாகிய பிரதி மாணவத் தலைவர் கதீஜா இக்பால், சிரேஷ்ட மாணவ தலைவர் ஆயிஷா நவாஸ், பிரதி சிரேஷ்ட மாணவ தலைவர் அம்னா அரபாத் மற்றும் பாடசாலை ஊடகப் பிரிவின் தலைவர் சல்மா அசாட் ஆகியோருடன் கல்லூரி ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், இப்பாடசாலையானது 140 வருட பாரம்பரிய சிறப்புடைய இலங்கையின் முதலாவது இஸ்லாமிய பெண்கள் பாடசாலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.