இளமையை நீட்டிக்கும், கருத்தரிக்க உதவும், இரத்தத்தை வலுப்படுத்தும், தூக்கம் வர உதவும் என பல நன்மைகள் இருபதாக நம்பப்படும் ஒரு சீன பாரம்பரிய மருந்து தயாரிக்க கழுதைத் தோலில் உள்ள ஒரு ரசாயனம் தேவைப்படுகிறது. இதற்காகச் சீனாவுக்கு ஏறுமதி செய்ய, ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகளில் கழுதைகள் தோலுக்காகக் கொல்லப்படுகின்றன. இது ஒரு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
தண்ணீர் விற்று தனது வாழ்க்கையை நடத்துபவர் ஸ்டீவ். அதறகாக அவர் தனது கழுதைகளையே முழுமையாக நம்பியிருந்தார். 20 தண்ணீர் கேன்களுடன் அவரது வண்டியை அவைதான் வியாபாரத்துக்கு இழுத்துச் செல்லும்.
இந்நிலையில், ஸ்டீவின் கழுதைகள் தோலுக்காக திருடப்பட்டபோது, அவர் மனமுடைந்துபோனார். அவரால் வேலை செய்ய முடியவில்லை.
அந்த நாளும் சாதாரணமாகத்தான் தொடங்கியது. காலையில், அவர் நைரோபியின் புறநகரில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி தனது கழுதைகளை அழைத்து வர வயலுக்குச் சென்றார்.
“ஆனால் என் கழுதைகளைக் காணவில்லை. இரவு பகலாக அவற்றைத் தேடினேன். மறுநாளும் தேடினேன்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, அவற்றின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்ததாக ஒரு நண்பர் அவரிடம் சொன்னார்.
“அவை கொல்லப்பட்டிருந்தன. அவற்றின் தோல் எடுக்கப்பட்டிருந்தது,” என்றார்.
ஆப்பிரிக்காவிலும், மற்றும் கழுதைகள் அதிகம் உள்ள உலகின் பிற பகுதிகளிலும் இப்படியான கழுதைத் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. கழுதைத் தோலைக் கொண்டு நடைபெறும் ஒரு உலகலாவிய சர்ச்சைக்குரிய வர்த்தகத்தில், ஸ்டீவ் மற்றும் அவரது கழுதைகளும் பாதிக்கப்பட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
இந்த வர்த்தகம், கென்யாவில் உள்ள அந்த வயலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் துவங்கப்பட்டது. சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக தேவை உள்ளது. இது எஜியாவோ (Ejiao) என்று அழைக்கப்படுகிறது.
இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இளமையை நீட்டிக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஜெலட்டின் பிரித்தெடுக்க கழுதை தோல்கள் வேகவைக்கப்படுகின்றன. பிறகு தூள், மாத்திரைகள் அல்லது திரவமாக மாற்றப்படுகின்றன. சில சமயங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது.
இந்த வர்த்தகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள், ஸ்டீவ் போன்றவர்கள் – மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் கழுதைகள் – எஜியாவோவின் பாரம்பரிய மூலப்பொருளுக்கான நீடித்த தேவையால் தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
ஒரு புதிய அறிக்கையில், 2017 முதல் இந்த வர்த்தகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் கழுதை சரணாலயம், உலகளவில் குறைந்தபட்சம் 59 லட்சம் கழுதைகள் ஒவ்வொரு ஆண்டும் படுகொலை செய்யப்படுவதாக மதிப்பிடுகிறது. பிபிசியால் அந்த புள்ளிவிவரங்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என்றாலும், கழுதைகளின் தேவை அதிகரித்து வருவதாக தொண்டு நிறுவனம் கூறுகிறது.
எஜியாவோ தொழிற்துறைக்கு வழங்குவதற்காக எத்தனை கழுதைகள் கொல்லப்படுகின்றன என்ற துல்லியமாக தெரிந்துகொள்வது மிகவும் கடினம்.
உலகில் வாழும் 5.3 கோடி கழுதைகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. ஆனால் அந்நாட்டின் விதிகளில் சில சிக்கல்கள் உள்ளன.
கழுதை தோல்களை ஏற்றுமதி செய்வது சில நாடுகளில் சட்டப்பூர்வமாகவும், சில நாடுகளில் சட்டவிரோதமாகவும் உள்ளது. ஆனால் அதிக தேவை மற்றும் தோலுக்கான அதிக விலை கழுதைகளின் திருட்டை தூண்டுகிறது. மேலும் வர்த்தகம் சட்டப்பூர்வமாக இருக்கும் இடங்களுக்குச் செல்ல விலங்குகள் சர்வதேச எல்லைகள் வழியாக கடத்தப்படுவதை கண்டுபிடித்துள்ளதாக கழுதை சரணாலயம் கூறுகிறது.
ஆனால், கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவை கொல்லப்படுவதைத் தடை செய்ய ஒவ்வொரு ஆப்பிரிக்க மாநில அரசாங்கமும், பிரேசில் அரசாங்கமும், தயாராக இருக்கின்றன. இதனால் விரைவில் இவ்விவகாரத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படலாம்.
நைரோபியில் உள்ள கழுதை சரணாலயத்தில் பணிபுரியும் சாலமன் ஒன்யாங்கோ, “2016 மற்றும் 2019-க்கு இடையில், கென்யாவின் கழுதைகளில் பாதி (தோல் வர்த்தகத்திற்காக ) படுகொலை செய்யப்பட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்,” என்றார்.
மக்கள், பொருட்கள், தண்ணீர் மற்றும் உணவை சுமந்து செல்லும் அதே விலங்குகள் – ஏழை, கிராமப்புற சமூகங்களின் முதுகெலும்பாக உள்ளன. எனவே தோல் வர்த்தகத்தின் அளவு மற்றும் விரைவான வளர்ச்சி பிரச்சாரகர்களையும் நிபுணர்களையும் கவலையடையச் செய்துள்ளது. மேலும், கென்யாவில் பலரை தோல் வர்த்தக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க தூண்டியுள்ளது.
பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் ஆப்பிரிக்காவின் அனைத்து மாநிலத் தலைவர்களும் சந்தித்த ஆப்பிரிக்க யூனியன் உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்கா முழுவதும் கழுதைத் தோல் வர்த்தகத்துக்கான காலவரையற்ற தடையை கொண்டுவரும் முன்மொழிவு நிகழ்ச்சி நிரலில் இருந்தது.
ஆப்பிரிக்கா முழுவதும் தடை செய்யப்படுவதைப் பற்றி ஸ்டீவ் பேசுகையில், இது விலங்குகளைப் பாதுகாக்க உதவும் என நம்புகிறார், “இல்லை என்றால், அடுத்த தலைமுறைக்கு கழுதைகள் இருக்காது,” என்கிறார்.
ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் உள்ள தடைகள் வர்த்தகத்தை வேறு இடத்திற்கு மாற்றுமா?
எஜியாவோ தயாரிப்பாளர்கள் சீனாவில் இருந்து பெறப்படும் கழுதைகளின் தோல்களைப் பயன்படுத்தினர். ஆனால், அங்குள்ள வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை 1990 இல் 1.1 கோடியில் இருந்து 2021-இல் 20 லட்சத்திற்கும் கீழே குறைந்தது. அதே நேரத்தில், எஜியாவோ பிரபலமானது.
சீன நிறுவனங்கள் தங்கள் தோல் பொருட்களை வெளிநாடுகளில் தேடத் தொடங்கின. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் கழுதை இறைச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன.
ஆப்பிரிக்காவில், இது வர்த்தகத்தில் கடுமையான இழுபறிக்கு வழிவகுத்தது.
எத்தியோப்பியாவில், கழுதை இறைச்சி சாப்பிடுவது தடைசெய்யப்பட்ட நிலையில், பொதுமக்களின் எதிர்ப்புகள் மற்றும் சமூக ஊடகங்களின் கூக்குரலுக்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டின் இரண்டு கழுதை இறைச்சிக் கூடங்களில் ஒன்று 2017-இல் மூடப்பட்டது.
தான்சானியா மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகள் 2022-ஆம் ஆண்டில் கழுதை தோல்களை அறுப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதித்தன, அதனால், இந்த வர்த்தகம் பாகிஸ்தானுக்கு மாறியது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், ‘சில சிறந்த கழுதை இனங்களை’ வளர்ப்பதற்காக அந்நாடு ‘அதிகாரப்பூர்வ கழுதை வளர்ப்பு பண்ணை’ ஆகிவிட்டதாக என அங்குள்ள ஊடகங்கள் விமர்சித்தன.
சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனா-ஆப்பிரிக்கா உறவுகள் அறிஞர் பேராசிரியர் லாரன் ஜான்ஸ்டன் கருத்துப்படி, சீனாவின் எஜியாவோ சந்தையின் மதிப்பு 2013-இல் சுமார் 320 கோடி டாலராக இருந்தது, 2020இல் 780 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இது பொது சுகாதார அதிகாரிகள், விலங்கு நல பிரசாரகர்கள் மற்றும் சர்வதேச குற்ற புலனாய்வாளர்களுக்கு கூட கவலையாக உள்ளது. மற்ற சட்டவிரோத வனவிலங்கு பொருட்களை கடத்துவதற்கு கழுதை தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
“எனது சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் அவர்கள் தங்கள் பொருட்களை விற்க கழுதைகளைப் பயன்படுத்துகிறார்கள்,” என்கிறார் ஸ்டீவ். மருத்துவம் படிக்க பள்ளிக் கட்டணம் செலுத்த தண்ணீர் விற்று பணத்தை சேமித்து வந்தார், ஸ்டீவ்.
கழுதை சரணாலயத்தில் கால்நடை மருத்துவராக இருக்கும் ஃபெயித் பர்டன், உலகின் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற வாழ்க்கைக்கு விலங்குகள் ‘முற்றிலும் அவசியமானவை’ என்று கூறுகிறார். இவை வலிமையான, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய விலங்குகள். “ஒரு கழுதை 24 மணிநேரம் தண்ணீர் குடிக்காமல் நடக்கும். எந்த பிரச்சனையும் இல்லாமல் மிக விரைவாக நீரேற்றம் செய்ய முடியும்.” என்றார் அவர்.
கழுதைகள் எளிதில் அல்லது விரைவாக இனப்பெருக்கம் செய்யாது. எனவே வர்த்தகம் குறைக்கப்படாவிட்டால், கழுதைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சுருங்கி, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் துணையையும் இழக்க நேரிடும் என்று பிரச்சாரகர்கள் அஞ்சுகின்றனர்.
“நாங்கள் எங்கள் கழுதைகளை படுகொலைக்காக வளர்க்கவில்லை,” என்கிறார் ஒன்யாங்கோ.
பேராசிரியர் ஜான்ஸ்டன் கூறுகையில், “கழுதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏழைகளைச் சுமந்துள்ளன. அவை குழந்தைகளை, பெண்களை சுமக்கின்றன,” என்றார் அவர்.
பெண்களும் சிறுமிகளும், ஒரு கழுதை திருடப்படும்போதுஏற்படும் இழப்பின் சுமைகளைத் தாங்குவதாக அவர் கூறுகிறார்.
“கழுதை போய்விட்டால், பெண்கள் மீண்டும் கழுதையாக மாறுகிறார்கள்,” என்று அவர் விளக்குகிறார். அதில் ஒரு கசப்பான முரண் உள்ளது, ஏனெனில் எஜியாவோ, முதன்மையாக பணக்கார சீனப் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு தீர்வாகும், இது இரத்தத்தை வலுப்படுத்துவதில் இருந்து தூக்கத்திற்கு உதவுவதற்கு, கருவுறுதலை அதிகரிப்பதற்கு என பல நன்மைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், 2011-ஆம் ஆண்டு சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘எம்பிரஸ் இன் தி பேலஸ்’ – ஒரு ஏகாதிபத்திய நீதிமன்றத்தின் கற்பனைக் கதை – இது மருந்தின் மதிப்பை உயர்த்தியது.
“நிகழ்ச்சியில் உள்ள பெண்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஒவ்வொரு நாளும் எஜியாவோ-ஐ உட்கொண்டனர். அது உயரடுக்கு பெண்மையின் தயாரிப்பாக மாறியது. முரண்பாடாக, அது இப்போது பல ஆப்பிரிக்க பெண்களின் வாழ்க்கையை அழித்து வருகிறது,” என்றார் பேராசிரியர்.
24 வயதான ஸ்டீவ், தனது கழுதைகளை இழந்தபோது, தனது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கவலைப்பட்டார். “நான் இப்போது வழியின்றித் தவிக்கிறேன்,” என்கிறார் அவர்.
கழுதைகள் சரணாலயத்தைச் சேர்ந்த ஜன்னெக் மெர்க்ஸ், கழுதைகளைப் பாதுகாக்க எத்தனை நாடுகள் சட்டம் இயற்றுகிறதோ, கழுதைத் தோல் வர்த்தகம் அவ்வளவு கடினமாக மாறும் என்று அவர் கூறுகிறார்.
“நாங்கள் பார்க்க விரும்புவது என்னவென்றால், எஜியாவோ நிறுவனங்கள் கழுதை தோல்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு நிலையான மாற்று வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் – செல்லுலார் விவசாயம் (ஆய்வகங்களில் உற்பத்தி செய்தல்) போன்றவற்றில் ஏற்கனவே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழிகள் உள்ளன,” என்கிறார் அவர்.
கழுதை சரணாலயத்தின் துணை தலைமை நிர்வாகியான ஃபெயித் பர்டன், கழுதை தோல் வர்த்தகம் ‘நிலையற்றது மற்றும் மனிதாபிமானமற்றது’ என்று கூறுகிறார்.
“அவை திருடப்படுகின்றன. நூற்றுக்கணக்கான மைல்கள் நடக்கக்கூடும், நெரிசலான இடத்தில் வைக்கப்பட்டு பின்னர் மற்ற கழுதைகளின் பார்வையில் படுகொலை செய்யப்படுகின்றன. இதற்கு எதிராக நாம் பேச வேண்டும்,” என்றார் அவர்.
ப்ரூக் இப்போது ஸ்டீவ்விற்கு ஒரு புதிய கழுதையைக் கொடுத்துள்ளார், அதற்கு அவர் ஜாய் லக்கி என்று பெயரிட்டார், ஏனெனில் அவர் அதை பெற்றதற்கு அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறார்.
“என் கனவுகளை அடைய அவள் எனக்கு உதவுவாள் என்று எனக்குத் தெரியும். அவள் பாதுகாக்கப்பாக இறுப்பதை நான் உறுதி செய்வேன்,” என்கிறார் ஸ்டீவ்.
நன்றி – பிபிசி