திருமணங்கள் உள்ளிட்ட வைபவங்களை நடத்தும் விழா மண்டபங்களுக்கான முன்பதிவு கட்டணங்களை அதிகரிக்க இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கான கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அனைத்து துறைகளின் பொருளாதார வளர்ச்சியும் 50 வீதத்தால் குறைவடைந்து செல்லும் நிலையே உள்ளது.
மரக்கறிகள் மாத்திரமின்றி அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதால், நட்டத்தை ஈடு செய்ய முடியாத நிலையிலேயே விழா மண்டப உரிமையாளர்களும் உள்ளனர்.
திருமண மண்டபங்கள், விழாக்களுக்கான மண்டபங்கள் என்பனவற்றுக்கான உணவு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் தமது தொழில்சார் உறுப்பினர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையை கருத்திற்கொண்டு முற்பதிவுகளுக்கான கட்டணங்களை 10% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.