சதொச ஊடாக விற்பனை செய்யப்படும், இறக்குமதியாகும் இந்திய முட்டை ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரையில், 35 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டையின் விலையை அடுத்த வாரம் முதல் அமுலாகும் வகையில் 43 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போது சதொச விற்பனை நிலையங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தரை தொடர்புகொண்டு வினவியபோது, முன்னதாக சதொச உள்ளிட்ட சிறப்பங்காடிகளுக்கு நாளாந்தம் 10 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்பட்டு வந்ததாக குறிப்பிட்டார்.
தற்போது, சதொச உள்ளிட்ட சிறப்பங்காடிகளுக்கு வழங்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் அளவு நாளொன்றுக்கு 4 இலட்சமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இந்த நாட்டுக்கு முட்டைகளை இறக்குமதி செய்யும்போது, முன்னரை போல தற்போது இறக்குமதி செய்வது சிரமமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏனைய நாடுகளில் இருந்து இந்திய முட்டைகளுக்கான கேள்வி அதிகரித்து வருவதே இதற்குக் காரணமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பரில் உள்ளூர் முட்டை விலை 60 முதல் 65 ரூபாய் வரை அதிகரித்ததை அடுத்து ஏப்ரல் மாதம் வரை முட்டை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள வெற் வரி திருத்தத்துடன் 35 ரூபாவிற்கு வழங்கப்பட்டு வந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலையும் அதிகரித்துள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.