அடுத்த வருடம் பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
71 வயதுடைய முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின்னர், அவர் அரசியல் மற்றும் சட்டரீதியான பல சிக்கல்களை எதிர்கொண்டார்.
2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது சட்டவிரோதமாக அரச பரிசுகளை விற்பனை செய்தமைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அவர் நேற்று தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ததாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியலில் இருந்து இம்ரான் கானின் பெயரை பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளது.
அரச ரகசியங்கள் கசிவு தொடர்பான வழக்கில் இம்ரான்கானுக்கு பாகிஸ்தானின் நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது.
எவ்வாறாயினும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நீக்கத்தை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.