அமேசன் (Amazon) உயர் கல்வி நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச பிரதான மண்டபத்தில் நேற்றைய தினம் (18) நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவின் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அருணாச்சலம் அரவிந்தகுமார், கௌரவ விருந்தினர்களாக மலேசியா பிரதி உயர்ஸ்தானிகர் அதி கெளரவ முஹம்மட் பின் துமிங், மாலைதீவு பிரதி உயர்ஸ்தானிகர் அதி கெளரவ. பாத்திமா கினா, ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் தலைமை பேராசிரியர் சமன் செனவீர, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க, களனி பல்கலைக்கழகத்தின் மொழியியல் பிரிவின் முன்னாள் தலைவரும் தற்போதைய தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவர் பேராசிரியர் எஸ்.ஜே.யோகராஜா, கல்வி அமைச்சின் தமிழ் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ். செந்துரத்தினம், ஜேர்மன்- சர்வதேச கல்வியல் நிபுணர் கலாநிதி உல்ரிகா, கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர் அழுஹர் முஹமட் ரியாஸ் அகியோர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வை தலைமை தாங்கி நடத்திய அமேசன் (Amazon) உயர் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரும் கல்லூரியின் பணிப்பாளர்,உளவியல் ஆலோசகர், பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், இல்ஹாம் மரிக்கார் அவர்களினால் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக அமேசன் (Amazon college) உயர் கல்வி நிறுவனம், அமேசன் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த முக்கிய நிகழ்வை பிரதம விருந்தினரான கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அருணாச்சலம் அரவிந்தகுமார் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
அமேசன் கல்லூரி மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் 120 டிப்ளோமா, 50 (HND) உயர் டிப்ளோமா மாணவர்கள், 150 இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் கற்கை நெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் விரிவுரையாளர்களும் ஊழியர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.