கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலங்கம, பெலவத்த பரீட்சை திணைக்களத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில், பரீட்சை திணைக்களத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் மீது, பரீட்சை திணைக்களத்தில் இருந்து வெளியில் வந்த லொறி ஒன்று மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 36 வயதான பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஏறாவூர் – மட்டக்களப்பு வீதியில் சௌகடே சந்திக்கு அருகில் வீதியைக் கடந்த பாதசாரி மீது தனியார் பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 17 வயதுடைய பாதசாரி ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் நிட்டம்புவ மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸின் உடலுடன் மோதியதில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கல்பிட்டி – பாலாவி வீதியில் மோட்டார் சைக்கிள் லொறியின் பின்புறம் மோதியதில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அவிசாவளை வீதியில் வீதியைக் கடந்த பாதசாரிகள் இருவர் மீது லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரிகள் இருவரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 34 வயதான பகமூன பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இதேவேளை, கொள்ளுப்பிட்டி – கடுவெல வீதியின் பத்தரமுல்ல பிரதேசத்தில் வீதியைக் கடந்த பாதசாரி மீது தனியார் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.