Date:

காசாவை ஆளும் ஹமாஸ் ஆயுதக் குழுவின் வரலாறு

பாலத்தீனப் பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு ஆயுதக் குழுக்களில் மிகப் பெரியது ஹமாஸ்.

இந்தப் பெயர் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்பதன் அரேபியச் சுருக்கத்தில் இருந்து பெறப்பட்டது. மேற்குக் கரையையும் காசா நிலப் பகுதியையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய முயற்சிக்கு எதிரான முதல் பாலத்தீன எழுச்சி தொடங்கிய பிறகு 1987-ஆம் ஆண்டில் உருவானது ஹமாஸ். இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என இதன் சாசனம் கூறுகிறது.

ஹமாஸ் இரு வேறு பணிகளைச் செய்து வருகிறது. ஒன்று இஸ் அட்-டின் அல்-காசம் என்ற தனது ராணுவப் பிரிவின் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவது. மற்றொன்று நலத்திட்டங்கள் மூலம் சமூகப் பணிகளைச் செய்வது.

ஆனால் 2005-ஆம் ஆண்டில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஹமாஸ் இயக்கம் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியது. 2006-ஆம் ஆண்டு நடந்த பாலத்தீன தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. கூட்டணி அரசிலும் பங்கேற்றது. அதிபர் முகமது அப்பாஸின் ஃபதா இயக்கத்தைப் பகைத்துக் கொண்டதால் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டு காசாவுக்குள் முடங்கியது.

அதன் பிறகு இஸ்ரேலுடன் மூன்று பெரிய போர்களில் காசா ஈடுபட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே அடைபட்டிருக்கும் காசா பகுதிக்குள் ஹமாஸ் இயக்கத்தை தனிமைப்படுத்துவதற்காகவும் தாக்குதல்களைத் நிறுத்தவதற்காகவும் இஸ்ரேல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஹமாஸ் இயக்கத்தை முழுமையாகவும், சில நேரங்களில் அதன் ராணுவப் பிரிவை மட்டும் பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகிய நாடுகள் பட்டியலிடுகின்றன.

இஸ்ரேல் – பாலத்தீனம்: புதிய சண்டைகளுக்கு வித்திடும் பழைய சிக்கல்கள்
இஸ்ரேல் – பாலத்தீனம்: பல தசாப்தங்களாக தொடரும் சண்டைக்கு என்ன காரணம்?

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்

பாலத்தீனர்களின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட பாலத்தீன விடுதலை இயக்கத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான அமைதி உடன்பாட்டை எதிர்த்த முக்கியமான இயக்கம் என்ற வகையில் 1990-களில் பரவலாக அறியப்பட்டது ஹமாஸ்.

1996-ஆம் ஆண்டு ஜெருசலேமில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றது.

இஸ்ரேலும் பாலத்தீன நிர்வாகமும் எத்தனையோ நடவடிக்களை ஹமாஸுக்கு எதிராக எடுத்தன. அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தன. ஆனால் தற்கொலைத் தாக்குதல்கள் மூலமாக இஸ்ரேலுக்கும் – பாலத்தீன விடுதலை இயக்கத்துக்கும் இடையேயான அமைதி உடன்பாட்டை தகர்த்தது ஹமாஸ்.

1995-ஆம் ஆண்டு டிசம்பரில் ஹமாஸின் வெடிகுண்டு தயாரிப்பாளரான யாயா ஆயாஷை இஸ்ரேல் கொன்றது. இதற்குப் பழிவாங்கும் வகையில் 1996-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை ஹமாஸ் இயக்கம் நடத்தியது. சுமார் 60க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஓஸ்லோ உடன்பாட்டுக்குப் பிறகு, குறிப்பாக அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் கேம்ப் டேவிட் பேச்சுகள் தோல்வியடைந்த பிறகும், இரண்டாவது பாலத்தீன எழுச்சியைச் தொடர்ந்தும் ஹமாஸ் இயக்கம் வலுவடைந்தது.

ஃபதா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பாலத்தீன நிர்வாகத்தில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் நிறைந்திருப்பதாக அதிருப்தி எழுந்த நிலையில், ஹமாஸ் இயக்கம் மருத்துமனைகளும் பள்ளிகளையும் உருவாக்கியது.

2004-ஆம் ஆண்டு நடந்த ராக்கெட் தாக்குதலில் ஹமாஸ் மதத் தலைவர் ஷேக் அகமது யாசின் கொல்லப்பட்டார்.

இரண்டாவது பாலஸ்தீன எழுச்சியின் தொடக்க ஆண்டுகளில் ஹமாஸ் இயக்கத்தின் தற்கொலைத் தாக்குதல்களை பாலத்தீனர்கள் பரவலாக ஆதரித்தனர். அவற்றை தியாக நடவடிக்கைகள் என்று அவர்கள் கருதினார்கள். மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குப் பழிவாங்கப்படுவதாக எண்ணினார்கள்.

2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹமாஸ் மதத் தலைவர் ஷேக் அகமது யாசின் மற்றும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அப்துல் அஜீஸ் அல்-ரேன்டிஸ்ஸி ஆகியோரை ஏவுகணைகள் மூலம் கொன்றது இஸ்ரேல்.

இஸ்ரேல் காசா மோதல்: ஹமாஸ் குழுவின் ஆயுத வலிமையும், பலவீனமும்
இஸ்ரேலின் Iron Dome: ஹமாஸ் ராக்கெட்டுகளை அழிக்கும் பிரம்மாஸ்திரம்
அதே ஆண்டில் ஃபதா இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத் மரணமடைந்தார். பாலத்தீன நிர்வாகத்துக்கு முகமது அப்பாஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கருதக்கூடியவர் அவர்.

2006-ஆம் ஆண்டு நடந்த பாலத்தீன நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் இயக்கம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஃபதா இயக்கத்துக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் அதிகார மோதல் தொடங்கியது.

தேர்தலில் வெற்றிபெற்றிருந்த ஹமாஸ் இயக்கம், அதற்கு முன் பாலத்தீன நிர்வாகத்தால் கையெழுத்திடப்பட்டிருந்த அனைத்து உடன்பாடுகளையும் எதிர்த்தது. இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிப்பது உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.

அதிபர் முகமது அப்பாஸ் தலைமையிலான பாலத்தீன அரசில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா (இடது) சிறிது காலம் பிரதமராகப் பணியாற்றினார்.

1988-ஆம் ஆண்டு சாசனம்

இஸ்ரேல் நாட்டை உள்ளடக்கிய வரலாற்று ரீதியிலான நிலப்பரப்பே பாலத்தீனம் என ஹமாஸின் சாசனம் வரையறுக்கிறது. யூத நாட்டுடன் எந்தவிதமான அமைதி உடன்பாடும் கூடாது என்கிறது.

யூத மக்களுக்கு எதிரான கடுமையான கருத்துகள் அந்த சாசனத்தில் கூறப்பட்டுள்ளன. அதனால் யூத எதிர்ப்புக் கொள்கையைக் கொண்ட அமைப்பு என ஹமாஸ் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.

2017-ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கம் தனது புதிய கொள்கைகளைக் கொண்ட ஆவணத்தை வெளியிட்டது. 1988-ஆம் ஆண்டு சாசனத்தின் பல்வேறு அம்சங்களில் தீவிரத்தன்மை இதில் குறைந்திருந்தது. நிலைப்பாடுகள் மாறியிருந்தன.

ஆயினும் இஸ்ரேல் என்றொரு நாட்டை அங்கீரிப்பதாயில்லை. ஆனால் காசா, மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாலத்தீன நாட்டை உருவாக்குவதை ஒப்புக் கொண்டது.

ஹமாஸின் சண்டை, யூதர்களுக்கு எதிரானதல்ல, “ஸியோனிச ஆக்கிரிப்பாளர்களுக்கு” எதிரானது என்கிறது ஹமாஸின் புதிய ஆவணம். ஆனால் இஸ்ரேல் இதை ஏற்கவில்லை. உலகை ஏமாற்றும் முயற்சி என்று விமர்சித்தது.

2007-ஆம் ஆண்டில் ஃபதா ஆதரவுப் படைகளை வெளியேற்றிய பிறகு காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது ஹமாஸ்

அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகள்

ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலும் அதற்கு ஆதரவான மேற்கு நாடுகளும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

2007-ஆம் ஆண்டு காசா துண்டு நிலப் பகுதியில் இருந்து ஃபதா இயக்கத்துக்கு ஆதரவான படைகளை ஹமாஸ் இயக்கம் வெளியேற்றியது. பதிலடியாக காஸாவின் எல்லைகளில் தடைகளைக் கடுமையாக்கியது இஸ்ரேல். ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது. இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் அனைத்து ராக்கெட் தாக்குதல்களுக்கும் ஹமாஸ் இயக்கமே காரணம் என்கிறது இஸ்ரேல். இதுவரை காசா பகுதிக்குள் மூன்று முறை ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொண்டிருக்கிறது.

2008-ஆம் ஆண்டு டிசம்பரில் காசா பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல்களைத் தடுப்பதற்காக ஆபரேஷன் கேஸ்ட் லீட் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் நடத்தியது. 22 நாள்கள் நடந்த இந்தப் போரில் 1,300 பாலத்தீனர்களும் 13 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டார்கள்.

ஹமாஸும் பிற இயக்கங்களும் அவ்வப்போது இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவுகின்றன

இதேபோன்றதொரு காரணத்துக்காக 2012-ஆம் ஆண்டில் ஆபரேஷன் பில்லர் டிஃபன்ஸ் என்ற பெயரில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது நடந்த வான்வெளி தாக்குதலில் காசம் படைப் பிரிவின் தலைவர் அகமது ஜபாரி கொல்லப்பட்டார். 8 நாள்கள் நீடித்த சண்டையில் 170 பாலத்தீனர்களும் 6 இஸ்ரேலியர்களும் பலியானார்கள்.

இந்த இரு சண்டைகளில் இருந்து மீண்டு வந்தது ஹமாஸ். ராணுவ ரீதியாக பின்னடைவு ஏற்பட்டாலும் இஸ்ரேலை எதிர்த்த இயக்கம் என்ற வகையில் பாலத்தீனர்களின் பரவலான ஆதரவு ஹமாஸுக்குக் கிடைத்தது.

2014-ஆம் ஆண்டு மேற்குக் கரையில் இருந்த ஹமாஸ் இயக்க உறுப்பினர்களை இஸ்ரேல் அதிரடிச் சோதனைகளை நடத்திக் கைது செய்தது.

அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது ஹமாஸ். அதற்கு மறுநாளே ஆபரேஷன் புரோடெக்டிவ் எட்ஜ் என்ற பெயரில் தாக்குதல்களைத் தொடங்கியது. காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையும் சுரங்கப் பாதைகளையும் அழித்தது.

2014-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்த சண்டையால் காசா பகுதி சீர்குலைந்தது

இந்தச் சண்டை 50 நாள்கள் நீடித்தது. 2,251 பாலத்தீனர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் 1,462 பேர் பொதுமக்கள். இஸ்ரேலியத் தரப்பில் 67 வீரர்களும் பொதுமக்களில் 6 பேரும் கொல்லப்பட்டனர்.

2014-ஆம் ஆண்டில் இருந்து அவ்வப்போது சண்டைகள் தொடங்குவதும் எகிப்து, கத்தார், ஐ.நா. போன்றவற்றின் தலையீட்டில் நிறுத்தப்படுவதுமாக பலமுறை நடந்திருக்கிறது. முழு அளவிலான போர் எதுவும் வெடிக்கவில்லை.

காசா பகுதியைச் சுற்றி கடுமையான தடைகளை இஸ்ரேல் விதித்திருந்தாலும், ஹமாஸ் இயக்கம் காசாவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ராக்கெட்டின் வலிமையையும் அதிகரித்திருக்கிறது. ஃபதா இயக்கத்துடனான அமைதி முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன.

அதே நேரத்தில் காசா பகுதியில் வசிக்கும் சுமார் 20 லட்சம் பாலத்தீன மக்களின் நிலைமை மோசமடைந்திருக்கிறது. பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. குடிநீர், மின்சாரம், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373