சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் புல்லினால் வெய்யப்பட்ட ஐரோப்பாவின் மிகப் பழமையான செருப்பு மற்றும் மண் வெட்டியை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினில் 19 ஆம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்களால் சூறையாடப்பட்ட வெளவால் குகை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின்போதே இந்த பண்டைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறைந்த வெப்பம் மற்றும் குளிரான காற்று அந்த குகையில் உள்ளவற்றை பாதுகாக்க உதவியுள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கூடைகள் மற்றும் கருவிகளின் தொகுதி ஒன்றையும் ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். இதுவரை அறியப்பட்டதில் தெற்கு ஐரோப்பாவின் தாவர நார் பொருட்களின் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட மிகப் பழமையான பொருட்கள் இவை என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரான மரியா ஹரேரோ ஒடால் தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்களை தயாரித்த தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்களை கையாண்ட விதம் ஆகியவற்றை கொண்டு வரலாற்றுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்கள் அதிக திறன்கொண்டவர்களாக இருந்தது உறுதியாகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதில் குகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 76 பொருட்கள் முன்னர் நம்பப்பட்டதை விடவும் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்பது புதிய காலக் கணிப்பு தொழில்நுட்பத்தில் உறுதியாகியுள்ளது. சில பொருட்கள் 9,000 ஆண்டுகள் பழமையானவையாகும்.
இதில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செருப்பு பல்வேறுபட்ட புல் வகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதோடு இதில் தோல் மற்றும் சுண்ணாம்பு உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது புதிய கற்காலத்தைச் சேர்ந்தது என்பதோடு 2008 ஆம் ஆண்டு ஆர்மேனிய குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட 5,500 ஆண்டுகள் பழமையான தோல் பாதணிகளை விடவும் பழமையானதாகும்.
தென் மேற்கு ஸ்பெயினின் அன்டலுௗசாவில் உள்ள வெளவால்களின் குகை அல்லது குவா டி லொஸ் முர்சிலாகொஸ் குகையில் இருந்தே இந்த 6000 ஆண்டு பழமையாக செருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குகை 1831 ஆம் ஆண்டு முதல்முறை நிலப்பிரபு ஒருவர் உர உற்பத்திக்காக வெளவால் எச்சத்தை பெற பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இரண்டு தசாப்தத்திற்கு குறைவான காலத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் இந்த குகையை பயன்படுத்தி உள்ளனர். அப்போது பதப்படுத்தப்பட்ட உடல்கள், கூடைகள், மரக் கருவிகள் மற்றும் பலதும் கண்டுபிடிக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW