Date:

பண  முதலைகளாக மாறியுள்ள சமாதான நீதவான்கள்

எம்.எல்.எஸ்.முஹம்மத்

சாரா பர்வீன் இவர்  இரத்தினபுரி நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹபுகஸ்தென்ன தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் . ஆடைத் தொழிற்சாலை ஒன்றில்  உதவி மேற்பார்வையாளராக கடமை புரிந்து வரும் சாரா  தனது மூன்று பிள்ளைகளையும் தமிழ் பாடசாலையொன்றில் சேர்த்து நல்ல முறையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.எனினும் தந்தை அன்வர் ஜாஸிம் சிங்கள மொழியில் கற்றதனால் கடைசி மகனாகப் பிறந்திருந்த இல்ஹாம் பரீதை தான் படித்த இரத்தினபுரி நகரத்திலுள்ள பிரபல சிங்கள மொழிப் பாடசாலையில் சேர்த்து இல்ஹாமை அழகு பார்க்க சாராவும் ஜாசிமும் ஆசைப்பட்டார்கள்.

இவர்கள். இதற்காக    இரண்டு வருடங்களுக்கு முன்னரே இரத்தினபுரி நகரிலுள்ள  வாடகை வீடொன்றிக்கு குடிபெயர்ந்து பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.மகன் இல்ஹாமை சிங்கள மொழி மூல முன்பள்ளியொன்றிக்கு அனுப்பி அவனை அவர்கள் தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.இல்ஹாமிற்கு ஐந்து வயது எட்டியதும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததிற்கிணங்க குறித்த பாடசாலைக்கு தரம் ஒன்றிற்கு இணைக்க உரிய ஆவணங்களை நிரப்பி விண்ணப்பிக்க ஆயத்தமானார்கள்.

எனினும் மகன் இல்ஹாமின் பெயர் இல்காம் என பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததால் சமாதான நீதவான் ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட உறுதிமொழிக் கடிதம் ஒன்றையும் மகனின் விண்ணப்பத்துடன் இணைக்க அவசியமாக இருந்தது.இறுதியில் இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.எஸ்.தர்மரத்ன என்ற சமாதான நீதவானின் கையொப்பத்துடன் மகனின் தரம் ஒன்றிற்கான விண்ணப்பம் பாடசாலைக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தரம் ஒன்றில் புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் தந்தை ஜாஸிமுக்கு பாடசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் சமாதான நீதவான் எஸ்.எஸ்.தர்மரத்னவினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பெயர் மாற்றம் தொடர்பான சத்தியக் கடதாசிகள் எதுவும் உரிய முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதனால் உங்கள் மகனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என அக்கடிதத்தின் ஊடாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.இறுதியில் இரத்தினபுரி நகரிலுள்ள எந்தவொரு சிங்கள மொழி மூலப் பாடசாலையிலும் மகனை சேர்க்க அனுமதி கிடைக்காத   நிலையில் மீண்டும் தமது ஊரிலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலையிலேயே மகனை சேர்க்க நேர்ந்தோம் என தந்தை ஜாஸிம்  தெரிவிக்கிறார்.

தந்தை ஜாஸிம் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் “மக்களுக்கு சேவையாற்றும் நோக்குடன் சமூகத்திலுள்ள கௌரவமான பிரஜைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சமாதான நீதவான் பதவிகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகிறது.தகுதியற்றவர்கள் பலர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.எவ்வாறு ஆவனங்களை அத்தாட்சிப்படுத்த வேண்டும் என்பது பற்றிய எந்தவொரு அடிப்படை அறிவும் பயிற்சியும் அற்ற ஒரு சமாதான நீதவானிடம் எனது மகனின் ஆவனங்களை அத்தாட்சிப்படுத்த நேர்ந்ததால் இறுதியில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதுடன் மகனின் குறித்த பாடசாலை அனுமதியும் தவறிவிட்டது”, என அவர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

Extraordinary Gazette issued amending subjects of several ministries |  Daily News

ஜாஸிமின் குற்றச்சாட்டு தொடர்பில் சமாதான நீதவான் எஸ்.எஸ்.தர்மரத்னவிடம் கேட்ட போது “கடந்த பல வருடங்களாக எனது காரியாலய உதவியாளரின் ஒத்துழைப்புடனேயே அனைத்து ஆவனங்களையும் உறுதிப்படுத்தி வருகிறேன்.எனினும் அன்றைய தினம் எனது உதவியாளர் வாராததால் நானே அனைத்தையும் மேற்கொண்டேன்.நான் உரிய முறையில் ஆவனங்களை உறுதிப்படுத்தியிருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்காது.இது தொடர்பில் எனது வருத்தத்தை தெரிவிக்கிறேன்”, என அவர் தெரிவிக்கிறார்.

பொது மக்களால் சமர்ப்பிக்கப்படும் பிரமாணப் பத்திரங்கள் மற்றும்  ஆவணங்கள் உட்பட  பிற சான்றிதழ்களை சான்றளித்தல் மற்றும்  அங்கீகரித்தல் ஊடாக பொது மக்களுக்கு இலவசமான சேவைகளையும் பணிகளையும் வழங்கும் நோக்குடன் கௌரவ நீதி அமைச்சரால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்பட முடியுமென 1978 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க 4ஆம் உபபிரிவு தெளிவு படுத்துகிறது.

இதன் அடிப்படையில் வருடாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் சமாதான நீதவான்களாக கௌரவ நீதி அமைச்சரால் நியமிக்கப் படுகின்றனர்.சிலர் குறித்த நிர்வாக மாவட்டத்திற்குள் மாத்திரம் பணிபுரியும் மாவட்ட சமாதான நீதவானாகவும் மற்றும் பலர் முழுத் தீவிலும் பணியாற்றும் வகையிலான அகில இலங்கை சமாதான நீதவான்களாக நியமிக்கப்படுகின்றனர்.அதேபோல அரசினால் நியமிக்கப்படும் பதவி தாங்குநர்களில் சிலர் தமது பதவிக்காலம் நிறைவு பெறும் வரையில் சமாதான நீதவான்களாக செயற்படுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய நலனிற்கும் சமூக மேம்பாட்டிற்கும் பங்காற்றியமையையிட்டு  நற்பிரஜையினருக்கு மாத்திரம் வழங்கப்பட வேண்டிய இவ்வுயர் கௌரவப் பதவி இன்று  பிரதேச அரசியல்வாதிகளதும் கட்சி அமைப்பாளர்களதும் மற்றும் அமைச்சர்களதும் விருப்பத்திற்குரியவர்களுக்கும்,ஆதரவாளர்களுக்கும் வழங்கப்படும் சேவைக் கைமாறாக மாறியுள்ளது என பிரபல  மனித உரிமை செயற்பாட்டாளர் ஷமின்த பியசேகர தெரிவிக்கிறார்.

ஆவனங்களை அத்தாட்சிப்படுத்துவது மாத்திரமின்றி கிராமிய மக்கள் மத்தியில் சமாதானம் மற்றும் சகவாழ்வு உட்பட அனைத்து பொதுநலப் பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் பங்கேற்க வேண்டுமெனவும் அனைத்து  சமாதான நீதவான்களிடமும் அரசு  எதிர்பார்க்கிறது.அத்துடன் மேற்படி அனைத்து சேவைகளையும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பிற்கு முரணின்றியும்,முற்றிலும் இலவசமாகவும் மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் எதிர்பார்க்கிறது.இது தொடர்பாக நீதி அமைச்சின் ஊடாக அனைத்து சமாதான நீதவான்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெறும் சத்தியப் பிரமாணத்தின் போதும் உறுதி அளிக்கின்றனர்.

எனினும் மேற்படி அனைத்து சட்ட திட்டங்கள் மற்றும் உறுதி மொழிகள் அனைத்தையும் மீறும் வகையில் நாட்டின் பல இடங்களில் சமாதான நீதவான்கள் செயற்பட்டு வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படுமிடத்து அவர்கள் சமாதான நீதவான் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்  என நீதி அமைச்சின் சமாதான நீதவான் பிரிவின் பிரதிப் பணிப்பாளர்  தெரிவிக்கிறார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் “நாடளாவிய ரீதியில் சமாதான நீதவான்கள் மூலம் இடம்பெறும்  மோசடிகள் குறித்து வருடாந்தம் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன.போலி ஆவணங்கள் தயாரிப்பது உட்பட பல நிதி மோசடிகள் பற்றியும் மக்கள் முறையிடுகின்றனர்.எமது சட்ட மூலத்தில் போதிய திருத்தங்கள் இல்லாததால் இவர்களுக்கெதிராக வழக்குகளை தொடர்வதில் தாமதங்கள் நிலவுகின்றன.சமாதான நீதவான் நியமனங்களின் போது அவர்களின் கல்வித் தகமைகளும் சமூக அந்தஸ்துகளும் கரத்திற் கொள்ளப்படுமானால் இப்பதவியின் கௌரவம் பாதுகாக்கப்படும் ”,என அவர்  மேலும் தெரிவிக்கிறார்.

.

மேற்படி பிரதிப் பணிப்பாளரின் கருத்தை உண்மைப் படுத்தும் வகையில் சமாதான நீதவான்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல சட்டவிரோதமான நடவடிக்கைகள் எமக்கு தெரியவந்துள்ளன.

குறிப்பாக முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அவர்களின் சேவைகளுக்கு பிரதியுபகாரமாக மக்களிடம் பணம் மற்றும் ஏனைய கட்டணங்கள்,நன்கொடைகள் உதவிகள் என பல வகையான சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடருவதாக  மனித உரிமைகள் தொடர்பான இரத்தினபுரி மாவட்ட செயாற்பாட்டாளர் கே.தமிழ்செல்லன்  தெரிவிக்கிறார்.

தமது தேவைகளை முன்னிட்டு தினமும் அதிகளவான மக்கள் வந்து போகும் அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள் உட்பட கிராமிய வங்கிகள் அமையப் பெற்றுள்ள வளாகங்களுக்கு அருகில் ஆவனங்களை அத்தாட்சிப் படுத்திக் கொடுக்கும் சமாதான நீதவான்கள் பலர் சுற்றித் திரிகின்றனர்.மற்றும் சிலர் தமக்கு மிகவும் நெருக்கமான  பணியாளர்கள் ஊடாக சமாதான நீதவான்களின் கையொப்பங்கள் தேவைப்படும் மக்களை நன்கறிந்து அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். தூர இருந்து வரும் மக்களின் பிரச்சினைகளையும் மனநிலைகளை நன்கறிந்து வைத்துள்ள மேற்படி சமாதான நீதவான்கள் விண்ணப்ப படிவங்களை நிரப்பிக் கொடுத்தும்,ஆவனங்களை அத்தாட்சிப் படுத்தியும்,கையொப்பங்களை இட்டும் ஆயிரக்கணக்கான ரூபாக்களை மக்களிடம் சுரண்டும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தமிழ்செல்வன் மேலும்   தெரிவிக்கிறார்.

ஆவனங்களை அத்தாட்சிப்படுத்தல் தொடர்பில் இரத்தினபுரி மாவட்ட சமாதான நீதவான் ஒருவரிடம் மூவாயிரம் ரூபா பணத்தையும் முக்கிய ஆவனங்களையும் இழந்த ஏ.ஆர்.எம்.ருக்கையா நோனா கருத்து தெரிவிக்கையில் “ அரசினால் சிரேஷ்ட பிரஜைகளுக்காக வழங்கிவரும் மாணிய உதவித் தொகையை பெறும் நோக்குடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் எனது வயோதிப அடையாள அட்டை மற்றும் மருத்துவ ஆவனங்களை உறுதிப்படுத்துவதற்காக எமது பகுதி பெண்மணி ஒருவரின்  உதவியுடன் இரத்தினபுரி நகர் பகுதியிலுள்ள சமாதான நீதவான் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தேன்.மேலும் மூவாயிரம் ரூபா பணமும் கொடுத்திருந்தேன்.எனினும் இதுவரை எனது ஆவனங்கள் எதுவும் திருப்பிக் கிடைக்குவில்லை.இது தொடர்பில் நான்  இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலும்  ஒரு முறைப்பாடொன்றை பதிவு செய்தேன் என அவர் தெரிவிக்கிறார்.

 

மேற்படி முறைப்பாடு தொடர்பில்  இரத்தினபுரி பொலிஸ் நிலைய  விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவரிடம்  கேட்ட போது “ சமாதான நீதவான்களின் மோசடிகள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன.எனினும் அரசியல் அழுத்தங்கள் தொடர்வதால் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த முடியாமல் உள்ளன.மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இவ்வாறான மோசடி சமாதான நீதவான்கள்  தொடர்பில் மக்களும் அரச திணைக்கள அதிராரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும்”, என அவர் தெரிவிக்கிறார்.

லெல்லுப்பிட்டிய சில்வ லேன் தோட்டத்தில் கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக தேயிலைத் தோட்ட விவசாயியாக பணிபுரிந்த தங்கராஜா முத்துசாமி என்பவரும் சமுர்த்தி வங்கிலிருந்து கடன் பெறுவதற்காக தனது ஆவனங்களை இரத்தினபுரி மாவட்ட செயலக வளாகத்திற்கு அருகிலுள்ள  சமாதான நீதவான் ஒருவரிடம் தனது விண்ணப்பபடிவத்தை நிரப்பித் தருவதற்காகவும் மற்றும் ஜந்து இடங்களில் அவரின் கையொப்பத்தை இடுவதற்காகவும் சமார் ஐயாயிரம் ரூபா அளவில் அவருக்கு கொடுக்க நேர்ந்ததாக முத்துசாமி தெரிவிக்கிறார்.

வரகாபொல மஸ்ஜித் மாவத்தையைச் சேர்ந்த பௌஸுல் அமீர் கருத்து தெரிவிக்கையில் “எமது பகுதியைச் சேர்ந்த சமாதான நீதவான் ஒருவர் மரணித்த தாயின் ஓய்வூதியத்தை மகன் பெறுவகையில் போலிச் சான்றிழ்களில் கையொப்பம் இட்டதால் அவரின் சமாதான நீதவான் பதவி பறிக்கப்பட்டதுடன் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கொன்றையும் எதிர்கொண்டு வருகிறார்”, என அவர் தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் “எமது பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சமாதான நீதவான் தன்னிடம் சான்றிதழ்களை அத்தாட்சிப் படுத்த வருவோரிடம் ரூபா 500.00 முதல் ரூபா 5000.00 வரை பணம் பெறுகிறார்.அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுவரும்  மேற்படி சமாதான நீதவானின் செயற்பாடுகள் தொடர்பில் பாரிய விமர்சனங்களும் உள்ளன”, எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இரத்தினபுரி மாவட்டத்தில்  சமாதான நீதவான்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடி சம்பவங்கள் குறித்து இரத்தினபுரி மாவட்ட விவாகப் பதிவாளர்  சங்கதின் செயலாளர் எம்.எஸ்.எம்.பாரூக்கிடம் கேட்ட போது அவர் இவ்வாறு பதில் தருகிறார்.

ஆரம்ப காலங்களில் மிகவும் கௌரவமாக மதிக்கப்பட்டு வந்த சமாதான நீதவான் பதவி இன்று மோசடிக்காரர்களின் கைகளுக்கு சென்றுள்ளது.அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளும் இப்பதவியைக் கொண்டு    அவர்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், போலிச் சான்றிதழ்களை உறுதிப்படுத்துவதற்குமே தமது பதவியை பயன்படுத்தி வருகின்றனர்.படித்தவர்கள் கூட சட்டங்களை பின்பற்றி செயற்படுவதில்லை.மக்களிடம் தமது கையொப்பங்களுக்காக ஆயிரக்கணக்கான  ரூபாக்களை கட்டணமாகப் அறவிடுகின்றனர்.போலி ஆவனங்களையும் அத்தாட்சிப் படுத்திக் கொடுக்கின்றனர். எமது சங்கம்  இந்த விடயம் தொடர்பில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மற்றும்  நீதி அமைச்சின் செயலாளரிடமும் புகார் செய்துள்ளது.அத்துடன் சமாதான நீதவான்களுக்கு நிர்வாகப் பயிற்சிகளையும் செயலமர்வுகளையும் தொடர்ச்சியாக  நடத்துவதன் மூலம் இவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கட்டுப்படுத்த முடியும்.அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சமாதான நீதவான்களின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த முன்வர வேண்டும்”,   என அவர்  மேலும் தெரிவிக்கிறார்.

சமாதான நீதவான்களின் தரத்தை உயர்த்துவது தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவிக்கையில் “சமாதான நீதவான் நியமனத்திற்கு க.பொ.த.சாதாரண தர அறிவு அடிப்படை கல்வித் தகமையாக கொண்டுவரப் பட வேண்டும்”, என தெரிவிக்கிறார்.

எனினும் இதுவரை க.பொ.த.சாதாரண தர அறிவு  சட்ட ரீதியான அடிப்படை கல்வித் தகமையாக கொண்டுவரப்படவில்லை. இதனால் வருடாந்தம் பல்லாயிரக்கணக்கானவர்கள் சமாதான நீதவான்களாக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை அமைச்சின் புள்ளிவிபரத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உலக நாடுகள் அனைத்திலும் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் சமாதான நீதவான் பதவி இலங்கையில் அரசியல் வாதிகளால் தீர்மானிக்கப்படும் பதவியாக மாறியுள்ளதால் அதன் உண்மையான மதிப்பையும் கௌரவத்தையும் இழந்து வருகிறது.இதற்கு மாறாக இந்நியமனம் தொடர்பான சட்ட மூலத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மீண்டும் சமூகத்தில்  சமாதான நீதவான்களின் அந்தஸ்த்தும் மதிப்பும் உயர்த்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி எம்.அஸ்கர் அன்சார் தெரிவிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...