Date:

இரத்தினபுரி மாநகர சபையின் பொறுப்பற்ற செயலினால் 70 மில்லியன் ரூபா இழப்பு

எம்.எல்.எஸ்.முஹம்மத்

இரத்தினக்கல் வியாபாரம் சிலரின் வாழ்க்கையில் திருப்பங்களையும் வெற்றிகளையும் ஈட்டிக்கொடுத்தாலும் பலரின் வாழ்க்கையில் அது இன்னும் ஆராத காயங்களாகவே உள்ளன.

எல்லாரும் போல் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் இரத்தினக்கல் வியாபாரத்தில் நுழைந்த சல்மான் பாரிஸ் இருபத்தையாயிரம் ரூபாவுக்கு அகழ்வுப் பணியாளரிடம் வாங்கிய நீல மாணிக்கக் கல்லை மிக உயர்ந்த விலைக்கு விற்கும் நோக்குடன் பலருக்கு காட்டிய போதிலும் இறுதியில் 225000 ரூபாவுக்கே அவனால் இரத்தினபுரி மாணிக்க சந்தையில் விற்க முடிந்தது.

எனினும் அதைப் பெற்றுக்கொண்ட பிரபல இரத்தினக்கல் வியாபாரி இரத்தினக்கல் சர்வதேச சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

இரத்தினக்கல் சர்வதேச சந்தையின்மையால் சல்மான் பாரிஸ் போன்ற பலர் தினமும் பெரிய வியாபாரிகளுக்கு ஏனிகளாக இருக்கின்றார்களே அன்றி அவர்களால் வாழ்க்கையின் உச்சத்தை அடைய முடிவதில்லை.

சல்மான் பாரிஸிடம் இது தொடர்பில் நாம் கேட்டபோது “இரத்தினக்கற்களின் உண்மையான பெறுமதி சர்வதேச இரத்தினக்கல் வியாபாரிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது.கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் எமது கற்களுக்கு இங்குள்ள உள்ளூர் வியாபாரிகளால் போதிய விலைகள் பேசப்படுவதில்லை.

மிகவும் குறைந்த விலைக்கே இறுதியில் விற்பனை செய்ய வேண்டியுள்ளது.இப்படி விற்பதன் மூலம் எமது அன்றாட செலவினங்களை மேற்கொள்வதற்குக்கூட இந்த வருமானம் போதியதாக இல்லை.இன்னும் நான் மூன்று பிள்ளைகளுடன் வாடகை வீட்டில்தான் வாழ்கிறேன்.சர்வதேச சந்தை வாய்ப்புக்களை அரசு உருவாக்கித் தந்திருந்தால் எமது பிள்ளைகளின் வாழ்க்கையும் நிச்சயம் உயர்ந்திருக்கும் என்கிறார் அவர்.

இரத்தினக்கல் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இரத்தினக்கல் சர்வதேச சந்தைகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகளும் அது தொடர்பான அரசின் முயற்சிகளும் இடைக்கிடையே வந்து போனாலும் இதுவரையில் உரிய தீர்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.இதனால் இரத்தினக்கல் வியாபாரத்தை வாழ்வாதாரத் தொழிலாக முன்னெடுத்து வரும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் அவர்களின் குடும்பங்களும் நிச்சமயற்ற வருமானத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதாக இரத்தினபுரி இரத்தினக்கல் வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரத்தினபுரி நகர அபிவிருத்தி திட்டத்தில் இரத்தினக்கல் வியாபாரத்தை முன்னெடுப்பதற்கான பல ஆலோசனை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அவை அனைத்தும் வெறும் கொள்கை அளவிலவிளான திட்டங்களாகவே இன்னும் உள்ளதாக இரத்தினபுரி மாணிக்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

2020 இல் 350 மில்லியன் ரூபா செலவில் இரத்தினபுரி நகரில் இரத்தினக்கல் ஆய்வு நிலையமொன்றை ஸ்தாபிக்கப்பட்ட போதும் அதுவும் இம்மக்கள் எதிர்பார்த்த இரத்தினக்கல் சர்வதேச சந்தை வாய்ப்பை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க தவறிவிட்டது என இரத்தினபுரி வர்த்தக சங்கத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஸனீர் தெரிவிக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 950 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுடன் இரத்தினபுரி நகரில் சர்வதேச இரத்தினக்கல் வியாபாரம் தொடர்பான இரத்தினபுரி சிட்டி சென்டர் செயற்றிட்டத்தை இரத்தினபுரி மாநகர சபை ஆரம்பித்தது.

இதற்கிணங்க தேசிய கடன் அபிவிருத்தி நிதியத்தின் 50%சதவீத முதலீட்டு பங்களிப்புடன் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இரத்தினபுரி சிட்டி சென்டர் கட்டிட தொகுதிக்கான நிர்மானப் பணிகளை முன்னெடுக்க லீமா நிறுவனத்துடன் மாநகர சபை ஒப்பந்தம் ஒன்றிலும் கைசாத்திட்டுள்ளது.

24 மாத கால எல்லைக்குள் நிர்மாணித்து முடிப்பதற்கு தீர்மானிப்பட்ட இச்செயற்திட்டத்தின் கீழ் 4 மாடிகள் கொண்ட வியாபார கட்டிடத் தொகுதியொன்றையும் அதில் இரத்தினக்கல் சர்வதேச சந்தை நிலையங்கள்,வியாபார ஸ்தலங்கள்,சினிமா நிலையம் உட்பட வாகன தரிப்பிடம் அமைப்பது தொடர்பாகவும் முடிவுகள் எட்டப்பட்டிருந்ததை இரத்தினபுரி மாநகர சபையின் 2020 மே மாதம் இடம்பெற்ற சபை அமர்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மே மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு இரத்தினபுரி மேயர் டிரான் அத்தநாயக்க உரையாற்றுகையில் இரத்தினபுரி இரத்தினக்கல் சர்வதேச சந்தை கட்டிட நிர்மாணம் தொடர்பில் எமது கட்டுபாட்டை மீறி சில கொடுப்பணவுகள் இடம்பெற்று விட்டன.லீமா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணத்தை மீளப்பெறுவதற்கு நாம் உரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.இதற்கிணங்க இதன் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்” என அவர் தெரிவிக்கிறார்.

ஒப்பந்த நிறுவனமான லீமா நிறுவனம் நிர்மாண முற்பணம் என்ற அடிப்படையில் 70 மில்லியன் ரூபாக்களையும் முதலீட்டு பங்குதார நிறுவனமான தேசிய கடன் அபிவிருத்தி நிதியத்திடமிருந்து வருட ஆரம்பத்தில் பெற்றுள்ளது என இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் எஸ்.பத்திராஜா வசம் பிள்ளை பிள்ளை தெரிவிக்கிறார்.எனினும் மேற்படி ஒப்பபந்த நிறுவனம் தமது நிர்மாணப் பணிகளை இது வரை ஆரம்பிக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

தகவல் அறியும் சட்ட மூலத்திற்கிணங்க பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரத்தினபுரி மாநகர சபைக்கும் லீமா நிறுவனத்திற்குமிடையில் பல தரப்பட்ட பணக்கொடுக்கல் வாங்கள்கள் இடம்பெற்றுள்ளன.அத்துடன் லீமா நிறுவனத்தின் நிர்மான செயற்பாடுகள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பாக சீ.ஈ.பி.ஈ.நிறுவனம் தொழிற்படடுள்ளது என்பதும் குறித்த தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

செயற்திட்ட நிர்மாணிப்பு தொடர்பான ஒப்பந்த நிறுவனம் தேசிய கடன் அபிவிருத்தி நிதியத்திடமிருந்து முற்பணமாக பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபா தொடர்பில் பல முரண்பாடான கருத்துக்கள் இரத்தினபுரி மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்ததால் இவ்வருடம் மே மாதம் இடம்பெற்ற இரத்தினபுரி மாநகர சபையின் பொதுக்கூட்டத்திலும் காரகாசமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளதை சபையின் கூட்ட அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

இரத்தினபுரி மாநகர சபையின் மேயர் ரிரான் அத்தநாயக்க இச்செயற்திட்ட நிர்மாணிப்பு தொடர்பில் பொறுப்பற்ற முறையில் செயற்படுகிறார் எனவும் 70 மில்லியன் பணத்தை முற்பணமாகப் பெற்றுக் கொண்ட லீமா நிறுவனம் தனது பணியை ஆரம்பிக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளது என மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட ஆளுந்தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர் .

பொதுவாக உள்ளூராட்சி மன்றங்களால் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசினால் விதந்துரைக்கப்பட்ட பல ஒழுங்கு முறைகள் உள்ளன.செயற்திட்ட முன்மொழிவு சபையில் சமர்பிக்கப்பட்டு அனைவரின் அங்கீராத்துடன் மதிப்பீட்டுப் பணிகளுக்காக திட்டமிடல் பிரிவின் ஆலோசனைகளும் பெறப்பட்டு சட்டப் பிரிவு ,கணக்காய்வுப் பிரிவு,தொழிநுட்பப் பிரிவு,பொறியியல் பிரிவு உட்பட அபிவிருத்திப் பிரிவு அனைவரினதும் சட்ட ரீதியான அங்கீகாரம் பெறப்பட்ட பின்னரே நிதியுதவிகளுக்கான ஒப்பந்தங்களும் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களிலும் உள்ளூராட்சி மன்றங்கள் கைசாத்திட வேண்டும் என அரச விதந்துரைகள் குறிப்பிடுகின்றன என சட்டத்தரணி அஸ்கர் அன்சார் குறிப்பிடுகிறார்.

எனினும் இரத்தினபுரி மாநகரசபையால் திட்டமிடப்பட்டுள்ள மேற்படி அபிவிருத்தி செயற்திட்டத்தில் அரசின் விதந்துரைப்புக்கள் பெருமளவில் தவறவிடப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணி அன்சார் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

இரத்தினபுரி சர்வதேச வர்த்தக கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் பற்றி இரத்தினபுரி மாநகர சபையின் பொறியியலாளர் எஸ்.ஷாந்தவிடம் கேட்டபோது குறிந்த செயற்திட்ட நிர்மாணிப்பு தொடர்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளன.புதிய நிறுவனத்திற்கு நிர்மான செயற்திட்டத்தை வழங்க நாம் உத்தேசித்சித்துள்ளோம்.

முன்னைய ஒந்பந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இதனை நிதி மோசடியாக என நோக்க முடியாது.அத்துடன் இது தொடர்பில் கருத்து வெளியிடுவது எமது எதிர்கால திட்டமிடல்களை பெருமளவில் பாதிக்கும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இரத்தினபுரி இரத்தினக்கல் சர்வதேச கட்டிடத் தொகுதியை நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 11 மாதங்களை கடந்துள்ள நிலையில் அந்நிலத்தில் எந்தவொரு நிர்மாணப் பணிகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. தொழில் நுட்ப மதிப்பீட்டு ஆய்வுகளுக்கான நிர்மாண பரிசோதனைகள் மாத்திரமே அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்செயற்திட்டத்தின் தற்போதைய இடை நிறுத்தம் தொடர்பிலும் அதன் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பில் இரத்தினபுரி மாநகர சபையின் செயலாளர் எஸ்.டி.உதார கருத்து தெரிவிக்கையில் சில முக்கிய பிரச்சினைகளினால் இச்செயற்திட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.தேசிய கடன் அபிவிருத்தி நிதியத்தின் 75%சத வீத நிதிப்பங்களிப்பினை நாம் கோரியுள்ளோம்.எமது கட்டுப்பாட்டை மீறி ஒப்பந்த நிறுவனத்திற்கு முற்பணமாக பெருந்தொகைப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.கட்டிடப் பொருட்களின் விலை உயர்வை காரணங்காட்டி நிர்மாணப் பணிகளை அவர்கள் தாமதப்படுத்துகின்றனர்.

எமது தரப்பிலும் சில தவறுகள் இடம் பெற்றுள்ளன.புதியதொரு ஒப்பந்த நிறுவனம் தொடர்பில் நாம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றோம்.பல கட்டங்களாக இச்செயற்திட்டம் அமுல் படுத்தப்பட வேண்டியுள்ளது.இரத்தினபுரி மாநகர சபையால் மக்களின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நாம் உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.அரசியல் தலையீடுகள் தொடரும் வரை மோசடிகளை தவிர்ப்பது மிகுந்த சவால் மிக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி செயற்திட்டத்தின் ஒப்பந்த நிறுவனம் தொடர்பில் முன்வைக்கப்படும் நிதிக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விளக்கம் கோரி அந்நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அவர்களிடமிருந்து தெளிவான பதில்கள் கிடைக்கப் பெறவில்லை.

இரத்தினபுரி மாநகர சபை அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான அரசின் பொது விதிமுறைகளை பின்பற்ற தவறியுள்ளதால் எழுந்துள்ள நிதி முரண்பாடுகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தவறிழைத்துள்ளவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு மக்கள் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என இரத்தினக்கல் வியாபார சமூகம் உட்பட இரத்தினபுரி மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...