பொதுமக்கள் சேவையை நிறைவேற்ற தவறியமைக்காக அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாதென ஜனாதிபதி வலிறுயுறுத்தினார்.
பதுளை மாவட்டச் செயலகத்தில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொதுமக்கள் சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாதென்றும் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே சட்டங்கள் மற்றும் சட்டக்கோவைகளை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.