செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் பயன்படுத்தி, கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாக சித்தரிக்கும் போலியான காணொளிகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் அமர்வில் உரையாற்றும்போதே மேயர் இதனை வலியுறுத்தினார்.
கடந்த 06ஆம் திகதி கொழும்பு நகரில் பெய்த கடும் மழையுடன் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளப்பெருக்கு தொடர்பில் நடைபெற்ற விசேட அமர்வில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த மேயர், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்தும் காணொளிகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ‘One Galle Face’ வர்த்தக வளாகம் நீரில் மூழ்கியிருப்பதைப் போன்று காட்டும் போலியான காணொளியொன்றும்,குளமொன்றில் இறங்கி நீராடுவதைப் போன்று தயாரிக்கப்பட்ட மிகவும் கவர்ச்சியான AI காணொளியொன்றும் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான தவறான நோக்கம் கொண்ட செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்த அவர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மழையைக் குறுகிய அரசியல் அலைகளை உருவாக்கிக்கொள்வதற்காகத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் எனவும் சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொண்டார்.

