சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்குத் தமது பிரச்சினைகள் குறித்து அறிவித்த போதிலும், இதுவரை அதற்கு எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்தார்.

 

 

 

இதற்கமைய, இன்றைய தினம் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவிக்கையில், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல அரச நிறுவனங்களின் உட்புறக் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

 

 

அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள், கணக்குக் கிளைகள், காணிப் பிரிவுகள், ஆட்களைப் பதிவு செய்யும் அலுவலகங்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உட்புறப் பணிகளில் பெரும்பாலானவற்றை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே மேற்கொள்வதால், அவர்கள் சேவைக்குச் சமூகளிக்காத காரணத்தினால் அப்பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட ஒன்பது மாகாண சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும், மத்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

இதற்கமைய, 12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

தமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தற்போது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

இதன்போது அரச நிர்வாக அமைச்சர் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சருடனும் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

எப்படியிருப்பினும், தமது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இதைவிட தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட ஆயத்தமாக உள்ளதாக அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இன்னும் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தை பெறவில்லை

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித்...

அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்

அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள பகுதிகளில் எதிர்வரும் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.       அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள...