அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு அனைவருக்கும் நிவாரணமாக அமைகிறது; எனவே, மக்களின் தீர்ப்பை மதித்து அவர் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “அவர் மேற்கொண்டுவந்த பயங்கரவாதத்தினால் முழு உலகமும் துன்பத்திற்கு ஆளாகியிருந்தது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை விமானப்படை செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு எம்மனைவருக்கும் ஒரு நிவாரணமாக அமைகிறது. ஏனெனில், அவர் மேற்கொண்டுவந்த பயங்கரவாதத்தினால் முழு உலகமும் துன்பத்திற்கு ஆளாகியிருந்தது. தற்போது தேர்தலில் செனட் மற்றும் காங்கிரஸில் அவரது கட்சி பெரும்பான்மையை இழந்திருக்கிறது.
இந்தத் தோல்விக்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அவர் யுத்தத்திற்குச் செல்லப்போவதில்லை என வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதியை மீறிச் செயற்பட்டார். அடுத்தது, குடியகல்வு தொடர்பான அவரது தீர்மானமாகும். என்றாலும் அவருக்கு விழுந்த இந்த அறையால், பலர் ஆளுநர்களாகவும் செனட்டர்களாகவும் தெரிவாகியிருக்கிறார்கள். இதுதான் அமெரிக்க மக்கள் ட்ரம்பிற்கு வழங்கிய மிகப்பெரிய பதிலடியாகும்.
எனவே, மக்களின் தீர்ப்பை மதித்து அவர் யுத்தத்தை நிறுத்த வேண்டும். அதேபோன்று நெதன்யாஹூவும் பலஸ்தீன் மற்றும் லெபனானுடனான யுத்தத்தை நிறுத்த வேண்டும். இது முழு உலகிற்கும் அழிவை ஏற்படுத்துகிறது. அதனால் அமெரிக்க மக்களின் தீர்ப்பை நான் பாராட்டுகிறேன்.
அதேநேரம், தற்போதைய அரசாங்கம் பல்வேறு சட்டமூலங்களைக் கொண்டுவந்திருக்கின்றது. அதில் அடக்குமுறைச் சட்டங்களும் அமைந்திருக்கின்றன. தற்போது அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் பயங்கரவாதம் தொடர்பான சட்டமூலத்திற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகிலும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
அதேவேளை, அரசுசாரா அமைப்புகள் மற்றும் நலன்புரி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான சட்டமூலமொன்றையும் அரசாங்கம் கொண்டுவர இருக்கின்றது. ஒழுங்குபடுத்தலை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால், இந்தச் சட்டமூலம் அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே கொண்டுவரப்படுகிறது. அனைத்து சிவில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது.
அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் சட்டமூலங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புகள் எதிர்த்துள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகவே இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ரத்துச் செய்வதாகவே ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது ஜனாதிபதி தனது வாக்குறுதிக்கு மாறாகச் செயற்பட்டிருப்பதைக்காண முடிகிறது.
சர்வதேச அமைப்புகள் பலவும் இதனை எதிர்த்துவரும் நிலையில், அரசாங்கம் தற்போது இதில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கின்றது. ஆனால், அரசாங்கத்தின் இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராக எதிர்ப்புகள் எழும்பும்போதே இதனைச் செய்திருக்க வேண்டும். மிகவும் மோசமான பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலங்களுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.


