இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை #சவூதி அரேபியாவின் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவித்துள்ளார்.
சவூதி உயர் நீதிமன்றம் இந்த மரண தண்டனைத் தீர்ப்பை இரத்து செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாகவே இம்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது சிவராசாவுக்கு கிடைத்த பெரும் நிம்மதி என்றும் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கியமைக்காக சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு பிரதியமைச்சர் தனது நன்றியைத்தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைக்கான தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகத்தின் தலைவர், உறுப்பினர்கள், இலங்கை மற்றும் சவூதி சட்டக்குழுவினர் ஆகியோரின் முயற்சிகளுக்கும் அவர் நன்றி கூறினார்.
சிவராசாவின் சட்ட விவகாரத்தில் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைற்கல்லாக அமைந்துள்ளது.
இருப்பினும், அவரது சட்டரீதியான நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.


