தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை எதிர்கால பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் கட்சிக்கு உள்ளதா என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
‘இந்தியா டுடே – சி-வோட்டர்’ நடத்தியதாகக் கூறப்படும் ‘மூட் ஒஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் பதவிக்கான விருப்பத் தேர்வில் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் நோக்கில் த.வெ.க. செயல்பட்டு வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் த.வெ.க. சார்பில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் ஒருவர் இந்தியாவின் பிரதமராக உருவாக வேண்டும் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, த.வெ.கவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்களும் விஜய் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வருமானத் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், விஜய் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தலைமையைப் பாராட்டியதுடன், தமிழக மக்கள் அவரை நம்பி வாக்களித்துள்ளதாகவும், குறுகிய காலத்தில் அவரது கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக மக்களின் நலனுக்காகவும், அவர்கள் விரும்பும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள் எனக் கூறிய அவர், பின்னர் அங்கிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


