கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MAS

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ பதக்க மேடை (Podium) மற்றும் விளையாட்டு ஆடைகளை எம்.ஏ.எஸ் ஹோல்டிங்ஸ் (MAS Holdings) நிறுவனத்தினால் அண்மையில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கைப் பொதுநலவாய விளையாட்டுச் சங்கத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இந்த ஆடைகளின் தொகுப்பு, ஜூலை 15ஆம் திகதி கொழும்பிலுள்ள ஒலிம்பிக் இல்லத்தில் நடைபெற்ற இலங்கை அணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் தடகளம், மாற்றுத்திறளுக்கான பாரா தடகளம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், பளுதூக்குதல் மற்றும் ஜூடோ ஆகிய 7 விளையாட்டுப் நிகழ்ச்சிகளின் கீழ் இலங்கையிலிருந்து 42 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு விளையாட்டுக்கும் தேவையான உடல் அசைவுகள், உடலமைப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து, அதேநேரம் இலங்கையின் தனித்துவ அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆடைகளை MAS நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இலங்கையின் பாரம்பரியத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள யானைகளை மையமாகக் கொண்டு, இலங்கையின் புனித மாபெரும் உயிரினங்கள் (Sacred Giants of Sri Lanka) என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டிற்கான பொதுநலவாய விளையாட்டு விழா ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல தலைமுறைகளாக வலிமை, கம்பீரம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் யானையின் குணாதிசயங்கள், பல சவால்களுக்கு மத்தியில் சர்வதேச அரங்கிற்கு முன்னேறியுள்ள இலங்கை வீரர்களின் அர்ப்பணிப்பான பயணத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக MAS நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் விழாவுக்காக தேசிய ஒலிம்பிக் குழுவுடனான எமது கூட்டாண்மை மூலம் இலங்கை அணிக்கு ஆதரவளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம், என்று MAS நிறுவனத்தின் தயாரிப்பு கண்டுபிடிப்புப் பிரிவின் பணிப்பாளர் அரோஷ் பெர்னாண்டோ தெரிவித்தார். மேலும், “MAS இன் திறமையான வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு குழுக்களின் அயராத உழைப்பின் மூலம் இந்தத் திட்டம் உயிர்பெற்றது. இந்த ஆடைகள் ஒவ்வொரு விளையாட்டின் செயல்திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதே நேரத்தில் பகிரப்பட்ட இலங்கை அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. யானையின் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையால் ஈர்க்கப்பட்ட இந்த வடிவமைப்பு, சர்வதேச அரங்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நமது தேசிய அணிக்கு ஒரு அர்த்தமுள்ள உத்வேகத்தை அளிக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டாண்மை குறித்து MAS ஹோல்டிங்ஸ் இன் நிறுவன விவகார இயக்குநர் ரஜிதா ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை விளையாட்டுத் துறைக்கான எமது அர்ப்பணிப்பு வெறும் ஆடைகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இது மனிதர்களில் முதலீடு செய்வது, அவர்களின் கனவுகளுக்கு ஆதரவளிப்பது மற்றும் நமது விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் நம்பிக்கையுடன் செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க உதவுவது பற்றியதாகும்.” என்றார்.

இலங்கையின் முன்னணி விளையாட்டு ஆடை உற்பத்தியாளரான MAS நிறுவனம், கடந்த பல வருடங்களாக நாட்டின் பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த தேசிய அணிகளுக்குத் தேவையான சர்வதேச தரத்திலான ஆடைகளை வழங்கி, உலக அரங்கில் இலங்கை வீரர்கள் சிறந்து விளங்க தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலங்கையில் மனிதர்களும் இயற்கையும் எவ்வாறு இணைந்து செழிக்க முடியும் என்பதை மறுபரிசீலனை...

ஜெஃப்ரி பாவா மூனமல் விருது, இலங்கையில் வடிவமைப்பு பற்றிய ஒரு புதிய சிந்தனை முறையை அறிமுகப்படுத்துகிறது; இது மனிதர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளும்...

34வது ‘FACETS Sri Lanka’ கண்காட்சி, 2027 ஜனவரி இலங்கையில் நடைபெறும்

FACETS Sri Lanka 2027: இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 34ஆவது ‘FACETS Sri Lanka’ கண்காட்சி, 2027 ஜனவரி...