இங்கிலாந்துக்கு மேற்கொண்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, கொவிட் உயிர்குமிழி முறைமையை மீறியதாகக் குற்றச்சாட்டிக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒழுக்காற்று குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
தம் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் வகையில் அவர்கள் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
ஒழுக்க விதிமுறைகளை மீறியதன் காரணமாக இம்மூவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் நிறைவடைவதற்கு முன்னதாகவே இலங்கைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், விசாரணை முடியும் வரையில் அவர்களுக்கு போட்டியில் பங்குபற்ற தடையும் விதிக்கப்பட்டது.
அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதுதொடர்பான விசாரணைகளுக்காக ஐவரடங்கிய விசாரணை குழுவொன்றை நியமித்தது.
குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, இங்கிலாந்து, டர்ஹாம் நகரில் தாம் தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியே சென்றிருந்த காணொளியொன்று அண்மையில் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
இந்த காணொளியில் அவர்கள் மிகவும் தடுமாற்றத்துடன், கையில் சிகரெட்டுகளை வைத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.