ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் போது மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தாம் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டதாகவும், இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் கூறினார்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய விடுவிப்பதற்குக் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எதிர்காலத்திலும் அவ்வாறான பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபத்துக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் ஜனாதிபதி கோரினார்.
வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து, அந்த பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
