7 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
தமது கோரிக்கைக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சர் வழங்கும் வரையில் தொழிற்சங்க போராட்டம் தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி அந்த சங்கம் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
வைத்தியர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் நேற்றும் ஸ்தம்பிதமடைந்தன.