வைத்தியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்தால் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய சுகாதார அமைச்சின் செயலாளருடன் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் போது, பிரச்சினைக்குரிய நிலைமையைச் செயலாளர் புரிந்துகொண்டதாகவும், சில தீர்மானங்களை எடுப்பதற்கு தனது அதிகார வரம்புக்கு அப்பால் அமைச்சரின் அனுமதி தேவைப்படுவதால் அமைச்சருடன் கலந்தாலோசித்து, தனக்கு அறிவிப்பதாக அவர் கூரியதாக கொலம்பகே தெரிவித்தார்.
அதன்படி, சுகாதார அமைச்சர் முடிவெடுப்பதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னதாக அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தால், பணிப்புறக்கணிப்பு நீடித்திருக்காது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனவே இவ்வாறான பணிப்புறக்கணிப்புக்கு அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இதேவேளை, 7 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில், அரச வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் இடையே நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தது.
நேற்றுக் காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை, தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.