பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களை இனி அடக்கி ஒடுக்கி ஆள முடியாது. அதற்கு இனி இடமளிக்கமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அக்கரபத்தனை பிளான்டேசனின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட தோட்ட நிர்வாக அதிகாரி, இ.தொ.கா. உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரமுகர்களுக்கு மிடையிலான கலந்துரையாடல் பிராந்திய தொழில் ஆணையாளர் தலைமையில் ஹட்டனிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிணக்குகள் சில பேசித் தீர்க்கப்பட்டன. எனினும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்காததால், தொடர்ந்தும் மக்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, கம்பனி அதிகாரிகள் தாமாகவே இறங்கி வந்து நாங்கள் முன்வைத்த மேலும் சில கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கினர். எனினும், வாய் மூலமாகவே இவை பேசப்பட்டன. இதனை எழுத்து மூலமாக வழங்க வேண்டும் என அறிவித்தோம்.
ஒரு சில நடவடிக்கைகளுக்கு தொழில் அமைச்சின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம். மேலும் அரை பெயர் வழங்குவது தொடர்பில் பேசித்தீர்மானிக்கப்பட்டது.
3300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஊழியர் சேலாப நிதி வழங்க வேண்டும் என தெரிவித்தேன். அதற்கு இணக்கம் தெரிவித்தனர். தரிசு நிலங்களை இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழிலுக்காக வழங்க வேண்டும் என நாங்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு அக்கரப்பத்தனை கம்பனி அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நேற்றைய தினம் டயகம, அக்கரப்பத்தனை, போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று தொழிலாளர்களிடம் இவ்விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தோம். அதன்பிறகு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிலாளர்களை பணிக்கு செல்லுமாறு தெரிவித்தேன். இத்தனை நாட்களாக ஒத்துழைப்பு வழங்கிய, கட்சி பேதமின்றி இருந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
(செ.திவாகரன்)