மருத்துவ பொருட்கள் தொடர்பான மீளாய்வு குழுவின் பரிந்துரையின்றி, ஐந்து வருடங்களில் 10,193 மில்லியன் ரூபாவுக்கு 4,619 பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அரசாங்க கணக்குகள் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.
2011 முதல் 2016 வரையான காலப்பகுதியில், இந்தக் கொள்வனவு இடம்பெற்றதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவான கணக்காய்வாளரின் விசேட கணக்கு அறிக்கையை ஆராய்வதற்காக அரசாங்க கணக்குகள் குழு கூடியது.
சில சந்தர்ப்பங்களில், கொள்முதல் நடவடிக்கையில் உள்ள சிக்கல் காரணமாக, மேலதிக செலவை ஏற்கவேண்டி இருந்தாக இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி சுமார் 800 மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் நிலைமை தொடர்பான உறுதிப்படுத்தல்களின்றி, மருத்துவ பொருட்கள் வருடாந்தம் நாட்டுக்கு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அளவிட முடியாது எனத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.