இலங்கை கிரிக்கெட் அணி எதிர்கொண்டுள்ள பின்னடைவைக் கண்டு வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த கவலையடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று (25) நியூசிலாந்துடன் நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நாட்டு கிரிக்கெட்டில் மாற்றமொன்றின் அவசியத்தை வலியுறுத்தி தனது ‘X’ தளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அணிக்குள் நிலவும் இந்த நெருக்கடியானது வெறுமனே ஒரு தோல்வி மாத்திரமல்ல எனவும், இது ஒட்டுமொத்த கட்டமைப்பிலும் உள்ள பலவீனமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்விகளால் வீரர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற போதிலும், ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது கிடைக்கும் கௌரவத்துடன், அதற்கான பொறுப்பையும் உரிய முறையில் சுமக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
ஏனைய கிரிக்கெட் அணிகள் தொழில்நுட்பம் மற்றும் தந்திரோபாயங்கள் ரீதியில் வேகமாக முன்னேறிச் செல்லும் ஒரு தருணத்தில், இலங்கை அணி இன்னமும் பழைய முறைமைகளிலேயே தொங்கிக்கொண்டிருப்பது தோல்விக்கான பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதற்கமைய, காலத்திற்கு ஏற்றவாறு மாறாவிட்டால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கைக்கு உள்ள அங்கீகாரமும் முக்கியத்துவமும் நழுவிப் போகும் பாரிய அபாயம் உள்ளதாக அவர் கூறுகிறார்.
கிரிக்கெட் நிர்வாகம் முதல் விளையாட்டு மைதானம் வரை அனைத்துப் பிரிவுகளின் பயணப் பாதையிலும் உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தனது ‘X’ பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.






