தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் மற்றும் ஊழல் இடம்பெறுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து, நேற்று (29) இரவு அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இலங்கை குத்துச்சண்டை சங்கம் மற்றும் அதன் தலைமைத்துவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த நெருக்கடிக்கு, தமக்கு நெருக்கமானவர்களுக்குச் சாதகமாக போட்டி முடிவுகளை மாற்றும் முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதே பிரதான காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியின் போதே இந்த சர்ச்சை ஏற்பட்டதாகக் குற்றம் சுமத்தும் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த போட்டியின் முதல் சுற்றில் இருந்து மூன்றாவது சுற்று வரை, தொழில்நுட்பத் திறன் மற்றும் தாக்குதல்கள் மூலம் ஒரு வீரர் தனது எதிராளியை விடப் பாரிய அளவில் முன்னிலையில் இருந்துள்ளார்.
இருப்பினும், எதிராளி பலமுறை சட்டவிரோதத் தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும், நடுவர் அதனைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
அத்துடன், கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில், நேரத்தை இழுத்தடிப்பதற்காக ஐந்து முறைக்கும் மேலாக அந்த வீரர் தனது வாய் பாதுகாப்பு கவசத்தை (Mouth Guard) கீழே விழுத்தியுள்ளார்.
சர்வதேச குத்துச்சண்டை விதிகளின்படி, இது புள்ளிகளைக் குறைக்க அல்லது போட்டியில் இருந்து தகுதி நீக்கம் (Disqualification) செய்யப்பட வேண்டிய குற்றமாகும். எனினும், அவருக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை.
இறுதியில், நடுவர்கள் 4-1 என்ற பிளவுபட்ட தீர்ப்பை (Split Decision) வழங்கியதன் மூலம், போட்டி முழுவதும் முன்னிலையில் இருந்த வீரருக்குப் பதிலாக மற்றைய வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், அது பின்னர் கைகலப்பாகவும் மாறியுள்ளது






