இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது 75ஆவது ஆண்டு நிறைவை (பவள விழா) முன்னிட்டு நடத்தும் “பவளப் பொங்கல் – 2026” மற்றும் பவள விழா அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் 75 ஆண்டுகால கல்விப் பணியைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இன்றைய தினம் (2026.01.23) வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மைதானத்தில் 75 பானைகளில் அனைத்து வகுப்புக்களையும் இணைத்து பொங்கல் பொங்கி ஆரம்பமானது. இந்த விசேட நிகழ்வு இந்துக் கல்லூரி கொழும்பின் அதிபர் திரு. இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கொழும்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. H.A.K.U.I. ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறைப் பேராசிரியர் கலாநிதி ச. முகுந்தன் அவர்கள் பங்கேற்று சிறப்பான உரையை ஆற்றினார்.

இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக IDM நேஷன் கேம்பஸ் தலைவர் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன், மற்றும் சாமுவேல் அண்ட் கோ பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் பங்குதாரர் திரு. சாமுவேல் சி. காந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
1951 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான கல்லூரியின் 75 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இந்த “பவளப் பொங்கல்” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு, கலை நிகழ்வுகளுடன் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் இவ்விழா அமைந்திருந்தது. இந்துக் கல்லூரி கொழும்பின் முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த அங்குரார்ப்பண நிகழ்வு, “தமிழர் திருநாளில் கலந்து சிறப்பிக்க அனைவரும் வாரீர்!” என்ற அழைப்புடன் இனிதே நிறைவடைந்தது.







