இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை விரைவாக விடுவிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மானிடம் – பூமிதான இயக்கத்தினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
அதற்கமைய, மாகாண பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம், தமது கோரிக்கை கடிதத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக கையளித்ததாக, மானிடம் – பூமிதான இயக்கத்தின் தலைவர் பரா நந்தகுமார் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
மலையகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வடக்கில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை தமது இயக்கம் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதிக்கு கையளித்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணிகளை வழங்குவதற்கு, காணி கொடையாளர்களும் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை விரைவாக விடுவிக்கும் பட்சத்தில், வீடுகளை நிர்மாணிக்க முடியும் என ஜனாதிபதிக்கு வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவான செயற்பாடுகளை முன்னெடுக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்குமாறும் ஜனாதிபதியிடம், மானிடம் – பூமிதான இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனூடாக, மலையகத்தில் காணியற்று, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளோருக்காக காணி உரிமையை உறுதி செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.






