இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய அரசு உயர்மட்ட அளவில் தூதரக ரீதியாகத் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அதிபர் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசு கொண்டுவர முயலும் புதிய அரசியலமைப்பு, மீண்டும் ‘ஒற்றையாட்சி’ முறையையே வலுப்படுத்தும் என்று முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தமிழர்களின் தன்னாட்சி உரிமையைப் பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அனைத்து அரசியலமைப்புகளும் தமிழ் மக்களைத் திட்டமிட்ட பாகுபாட்டிற்கு உள்ளாக்கியுள்ளன என்றும், கடந்த 16 ஆண்டுகளாக நில அபகரிப்பு மற்றும் மக்கள் தொகை மாற்றங்கள் மூலம் தமிழ் அடையாளம் சிதைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1985-ம் ஆண்டு திம்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட தமிழர் தேசியம், தமிழர் தாயகம் மற்றும் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான தீர்வை இந்தியா பெற்றுத்தர வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
1987-ம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இந்தியாவிற்கு உள்ளது. எனவே, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் மற்றும் கூட்டாட்சி முறையை உருவாக்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






