கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இன்று (27) காலை விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்பில், இத்தகவல் குறித்து கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி மாவட்ட செயலகத்தின் ஐந்து இடங்களில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று (26) செய்தி ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, கண்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.






