பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருகை தரும் நுகர்வோருக்கு வரையறைகளை விதிப்பது எந்தவொரு விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றும் அவ்வாறானவொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் நுகர்வோா் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யமுடியும் என்றும் நீதி அமைச்சின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.த சில்வா தெரிவித்தாா்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டா்ா. அவர் மேலும் தெரிவிக்கையில்,
நுகர்வோரால் கோரப்படும் பொருள் விற்பனையாளர்களிடம் இருக்குமாக இருந்தால் நுகர்வோரின் தேவைக்கேட்ப பொருட்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். இது தொடர்பான தகவல்கள் நுகர்வோர் விவகாரம் தொடர்பான சட்டத்தின் 11ஆவது உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவையான பொருட்களை பெற்றுத்தர முடியாது என்றோ அல்லது வரையறைகளின் அடிப்படையிலேயே பொருட்கள் வழங்கப்படும் என்று வியாபாரிகளால் குறிப்பிட முடியாது. நுகர்வோரின் தேவையை நிறைவேற்ற வேண்டியதே வியாபாரிகளின் கடமை. அவ்வாறு நுகர்வோரின் தேவை முறையாக நிறைவேற்றப்படாவிட்டால் அதனை சட்டத்தை மீறும் வகையிலான செயற்பாடு என்றே கருதவேண்டும்.
தமக்கு தேவையான பொருட்களை தேவையான அளவு கொள்வனவு செய்வதற்கான உரிமையும் சுதந்திரமும்
நுகர்வோருக்கு இருக்கிறது. நுகர்வோரால் கோரப்படும் பொருளொன்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திலோ அல்லது விற்பனை நிலையத்திலோ இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட வியாபாரி நுகர்வோரால் கோரப்படும் பொருள் இல்லையென்று மறுப்பு தெரிவிக்க முடியும். குறித்த பொருள் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மாத்திரமே பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் அதனை சகலருக்கும் சமமாக வழங்க முடியும்.
அவ்வாறு வியாபாரிகள் நுகர்வோர் கோரும் பொருட்களுக்கு பாரபட்சம் காட்டுவார்களாக இருந்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறானவொரு நிலை உருவாகியிருக்குமாக இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இருக்கிறது. அந்த அதிகாரசபைக்கு அறிவித்து அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு முறைப்பாடு செய்யும் பட்சத்தில் நுகர்வோா் அதிகார சபை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நுகர்வோரின் உரிமை மறுக்கப்படுவது பயங்கர நிலைமையாகும். இதனால் நுகர்வோா் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றாா்.