ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனிப்பட்ட ரீதியில் முன்வந்துள்ளமை குறித்து விசேட நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அத்துகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான அனைத்துக் கலந்துரையாடல்களும் மேற்கண்ட மூவர் கொண்ட குழுவினாலேயே முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.






