மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மகாவலி ஆற்றின் சில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, மகாவலி ஆற்றுப் படுக்கையைச் சேர்ந்த கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, மெதிரிகிரிய, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கை சார்ந்த தாழ்வான பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் கல்லெல்ல பகுதியும், சோமாவதி ரஜமஹா விகாரைக்கான நுழைவு வீதியும், சோமாவதி ரஜமஹா விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால், அடுத்த சில நாட்கள் வரை சோமாவதிய ரஜமஹா விகாரைக்குச் செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.






