முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு இனவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (13) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தினால் ஊகிக்கக்கூடிய பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருமானத்தை எதிர்பார்த்த மட்டத்தை விட அதிகரிக்க தற்போது முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் 36வது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல், அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு விஹாரமஹாதேவி திறந்தவெளி அரங்க வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர உள்ளிட்ட அக்கட்சியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.






