தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன், களனி, அத்தனகலு, கிங் மற்றும் பென்தர ஆறுகளை அண்மித்த பகுதிகளிலும் 50 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மழைவீழ்ச்சியினால் களுகங்கையை அண்மித்த பகுதிகளே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக இரத்தினபுரி, மில்லகந்த, எல்லகாவ பிரதேசங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதுள்ள மழைவீழ்ச்சிக்கு அமைய அது வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு வரும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவானால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், களுகங்கையை அண்மித்த குடியிருப்பாளர்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த மக்களும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பெய்யும் மழைவீழ்ச்சிக்கு அமைய அந்தப் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படுமா என்பது குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.






