வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தில் சந்தேக நபர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாரளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“நான்கு பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தகவல்கள் கிடைத்து வருகிறது.
இதில் தொடர்புடைய அனைவரும் 2 முதல் 3 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள். அதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.
அவர் கொலை செய்யப்பட்டதற்கு நாங்கள் வருந்துகிறோம்.
நேற்று நான் சொன்னேன், இது பாதாள உலகக்குழு நடவடிக்கை. எனினும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களா அல்லது வேறு யாரா என்பது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என்றார்.
நேற்று (22) காலை, வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெள்ளை சட்டை அணிந்து கருப்பு நிற முகக்கவசத்துடன் வந்த துப்பாக்கிதாரி, தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
துப்பாக்கிதாரி உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நான்கு முறை சுட்ட பின்னர், மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் விதம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பிரதேச சபைத் தலைவர், மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிதிகம ருவனின் பிரிவினரால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தனக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து லசந்த விக்ரமசேகர கடந்த ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி தமது உயிரை பாதுகாப்பதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது