கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கொழும்பு மாநகரசபைக்கு அறிவுறுத்தியது.
மதிப்பீட்டு வரியைப் பராமரித்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்காக KOICA திட்டத்தின் மூலம் ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்க எதிர்பார்ப்பதாக கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கோபா குழுவிடம் தெரிவித்தனர்.
இதற்கு அமைய, KOICA திட்டத்துடன் கலந்துரையாடி மதிப்பீட்டு வரியை அறவிடும் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்க தயாரிக்கும் தரவுத்தள அமைப்பைப் பயன்படுத்தி அடையக்கூடிய முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் கொழும்பு மாநகரசபைக்கு அறிவுறுத்தப்பட்டது.
கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தினால் இதுவரை சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நிலுவைத் தொகையை 6 மாதங்களுக்குள் வசூலிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் கோபா குழு கேள்வியெழுப்பியது.
இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், ரூ.610.96 மில்லியன் நிலுவைத் தொகையில், இதுவரை ரூ.148 மில்லியன் அறவிடப்பட்டுள்ளதாகக் கூறினர். எஞ்சியுள்ள தொகையை அறவிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அறவிட வேண்டிய இந்த நிலுவை வருமானத்தை முறையாக அறவிடுவதற்கான திட்டம் தொடர்பான முழுமையான அறிக்கையை குழுவுக்குச் சமர்ப்பிக்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும், கொழும்பு மாநகர சபைக்குக் கிடைக்கும் ஏனைய வருமான வழிகளைச் சேகரிப்பதற்காக ஒரு முறையான தரவு அமைப்பை உருவாக்குவதற்கான திட்டம் மற்றும் அடையாளம் காண முடியாத சொத்துக்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் கோபா குழுவின் தலைவர் கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அத்துடன், மோதறை பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட எலி ஹவுஸ் காணி தொடர்பாக கோபா குழு முன்னர் வழங்கிய பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது கோபா குழுவினால் அதுவரையில் குறித்த காணியை சட்டவிரோதமாக அனுபவித்துவரும் நபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீடு தொடர்பில் கௌரவ ஆளுனருடன் கலந்துரையாடலை நடத்தி, குறித்த சொத்து கொழும்பு மாநகரசபையினால் மீளப்பெற்றுக்கொள்வதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அத்துமீறியுள்ள நபர்கள் நிலுவைக் குத்தகை மற்றும் அபராதங்களைச் செலுத்த ஒப்புக்கொண்ட போதிலும், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். இதன்போது, காணியின் மொத்த அளவு 140 பேர்ச்சஸ் ஆக இருந்தாலும், 1992 ஆம் ஆண்டு முதல் 40 பேர்ச்சஸ் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்தது. அந்த ஒப்பந்தமும் 2022 ஆம் ஆண்டில் காலாவதியாகிவிட்டது என்று கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், காணியில் ஒரு தொண்டு நிறுவனம் இயங்கி வருவதால், அவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிலுவைக் குத்தகை மற்றும் அபராதப் பணத்தை அறவிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகக் கூறினர். அத்துடன், ஒப்பந்தம் செய்யப்படாத எஞ்சிய 50 பேர்ச்சஸை மீண்டும் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர்.
இருப்பினும், இந்த நடவடிக்கைகளால் பல சிக்கல்கள் எழும் என்று சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், நிதி மற்றும் பொது நிர்வாக ஒழுங்குவிதிகளுக்கு அமைய செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதன்படி, பயன்படுத்தப்படும் எஞ்சிய பேர்ச்சஸ் காணிக்கான நிலுவை அபராதத் தொகை குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார், மேலும் அந்த அறிக்கையை டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்க முடியும் என்று அதிகாரிகள் குழுவுக்குத் தெரிவித்தனர்.
அத்துடன், பொரள்ளை கணத்தை நிர்வாகியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதற்குரிய காணியைத் தவறாகப் பயன்படுத்தி அங்கீகாரம் பெறப்படாது அமைக்கப்பட்ட மலர்சாலை தொடர்பில் குழு முன்னர் வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் குழு வினவியது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அதுவரை குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படாதது குறித்து குழு அதிருப்தி தெரிவித்தது.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.