ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனானது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் வென்றே ஒன்பதாவது தடவையாக இந்தியா சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ், பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சஹிப்ஸடா பர்ஹான், பக்கர் ஸமன் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. 57 (38) ஓட்டங்களுடன் வருண் சக்கரவர்த்தியிடம் பர்ஹான் வீழ்ந்ததன் பின்னர் 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான் மேலும் 33 ஓட்டங்களைப் பெறுவதற்குள் குல்தீப் யாதவ் (4), அக்ஸர் பட்டேல் (2), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரிட் பும்ராவிடம் (2) 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 147 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஆரம்பத்திலேயே பஹீம் அஷ்ரஃப் (2), ஷகீன் ஷா அப்ரியிடம் அபிஷேக் ஷர்மா, அணித்தலைவர் சூரியகுமார் யாதவ், ஷுப்மன் கில்லை இழந்து 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 20 ஓட்டங்களையே பெற்றுத் தடுமாறியது.
பின்னர் திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் இனிங்ஸை நகர்த்திய நிலையில் அப்ரார் அஹ்மட்டிடம் சாம்சனிடம் வீழ்ந்தார். இதன் பின்னர் திலக்குடன் ஜோடி சேர்ந்த ஷிவம் டுபே வெற்றியிலக்கை நோக்கி இந்தியாவை நகர்த்திய நிலையில் 33 (22) ஓட்டங்களுடன் பஹீமிடம் டுபே 19ஆவது ஓவர் முடிவில் வீழ்ந்தார்.
இறுதி ஓவரில் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் திலக்கின் ஆட்டமிழக்காத 69 (53) ஓட்டங்களுடன் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்தியா வெற்றியிலக்கையடைந்தது.