கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை கட்சியின் தலைவர் விஜய் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின்போது ஐதராபாத் தரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என சென்னை மேல் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்தநிலையில் தான் கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 39 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனால் விஜய் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டத்திற்கு விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமையினால் அங்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தமையினால் நெரிசல் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
எனவே இந்த அனர்த்தத்திற்கு விஜயும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறுகிய இடத்தை வழங்கியமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக கூறி தமிழக வெற்றிக் கழகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேநேரம் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கவுள்ளதாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அத்துடன் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில் என் மனம் படுகின்ற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை எனவும் விஜய் இன்று வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவொன்றை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நியமித்துள்ளார்.
அந்த குழுவின் பரிந்துரையின் படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் இதற்கு முன்பு மத நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நெரிசலில் தான் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து இருக்கிறது.
ஆனால் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏற்கனவே ஆந்திராவில் கடந்த 2022-ம் ஆண்டு நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.