இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அவர்கள் நிதி உதவி செய்தனர். அந்த பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது.
2019 தேர்தலில் சுமார் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள். ஆனால் 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை வென்று வெற்றி பெற முடிந்தது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய இலங்கை, கடன்களை செலுத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து எமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது.
அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களை இலங்கை மக்கள் முதல் முறையாக வெளியேற்றினர்.
பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம்.
ஒரு பொருளாதாரம் இப்படி சரிந்தால், ஒரு நாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
2022 ஆம் ஆண்டில் நாடு சரிந்திருந்தால், முந்தைய நிலைக்குத் திரும்ப 2032 ஆகும். ஆனால் நாடு சரிவதற்கு முன்பு 2019 இல் இருந்த பொருளாதாரத்தை அடுத்தாண்டு நாம் அடைய முடியும் என்று நினைக்கிறோம் என்றார்.