பலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் 80ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
அவர் கூறியதாவது,
“தனி நாடு அந்தஸ்து பலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை.காஸா பிரச்சினையைத் தீர்க்க இரு நாடுகள் தீர்வுதான் ஒரே வழி. இஸ்ரேலும் பலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும்.
1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு நாடுகள் தீர்வு இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி இருக்காது” என்று தெரிவித்தார்.
நடப்பு ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
முன்னதாக இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா,போர்த்துக்கல் ஆகிய நாடுகளும் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தன.
இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
இது காஸாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது இராஜதந்திர அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.