கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவற்றில் 55 சுற்றிவளைப்புகள் அரிசி விற்பனை தொடர்பிலும் ஏனைய 15 சுற்றிவளைப்புகள் களஞ்சியப்படுத்தல் சுற்றிவளைப்புகளும் அடங்கும் என அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அரிசியை பதுக்கி வைத்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் நிபந்தனைகளுடன் அரிசியை விற்பனை செய்தல் போன்ற குற்றங்கள் அந்த சுற்றிவளைப்புகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தனிப்பட்ட வர்த்தகர் அதிக விலைக்கு அரிசியை விற்றதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு 100,000 முதல் 500,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 5 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் 5 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை அபராதம் விதிக்கலாம் என்றும், அரிசி பதுக்கல் தொடர்பான குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டால், அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கலாம் என்றும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாவது தடவையாகவும் அதே குற்றத்தை புரிந்தால் அபராதம் இரட்டிப்பாகும் என்பதுடன் சிறை தண்டனை ஒருவருடமாக அதிகரிக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.