ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (21) சுப்பர் – 4 சுற்றில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே இந்த தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
அத்துடன் அன்றைய ஆட்டத்தின் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு, இந்திய அணி வீரர்கள் கைகுலுக்குவதை நிராகரித்தமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்திய அணி அவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் அணி அதிருப்தி வௌியிட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிலும் முறைப்பாடளித்திருந்தது.
பின்னர் அந்த சம்பவத்தை கண்டித்து ஐக்கிய அரபு இராச்சியம் அணியுடனான போட்டியின் போது மைதானத்திற்கு தாமதமாகவே பாகிஸ்தான் அணி வந்தது.
இதனால் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள நிலையில் போட்டிக்கு முன்னதாக இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பை பாகிஸ்தான் அணி புறக்கணித்துள்ளது.
இவ்வாறான சூழலில் போட்டியின் வெற்றி, தோல்வி ஒருபுறம் இருக்க, இரண்டு அணி வீரர்களும் இன்று கைகுலுக்குவார்களா என்பதையே கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.