நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயல்முறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் வரவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்து தெரிவிக்கையில்:
சில மருந்துகள் தனியார் சந்தையில் கிடைக்காது, திறந்தவெளியில் கிடைக்காது, சந்தையிலும் கிடைக்காது, மருந்தகங்களில் கிடைக்காது. இதுபோன்ற பல சிக்கல்கள் உள்ளன. மருந்துப் பதிவின் போது வரம்பற்ற விலைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் பதிவை நாங்கள் அனுமதிப்பதில்லை. தெற்காசிய நாடுகளில் தற்போதைய சந்தை நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை விரும்பாதவர்கள் மருந்துகளை விநியோகிக்க மாட்டார்கள். டெண்டர் செய்யும் பொறுப்பை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடம் வழங்கியுள்ளோம். சுமார் 80%-85% பணி அதில் நிறைவு பெற்றுள்ளது. நாம் ஏற்கனவே கொள்வனவு செய்த மருந்துகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் வரவுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.