காஸாவுடனான ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்கிழமை (16), இயல்பாக்கத்திற்கு எதிரான மொராக்கோ ஆய்வகம் மற்றும் பாலஸ்தீனத்திற்கான தேசிய பணிக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு உண்ணாவிரதப் போராட்டம் ரபாத்தில் நடத்தப்பட்டது.
குழுவின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையுடன், காஸா பிராந்தியத்தில் நடந்து வரும் முற்றுகை, பஞ்சம் மற்றும் கட்டாய இடப்பெயர்ச்சியை செயற்பாட்டாளர்கள் கண்டிதததோடு, மொராக்கோ இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதை விமர்சித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தினர்.
முகமது வீ பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான லத்தீபா பௌஹ்சினி, உலகெங்கிலும் உள்ள 100 இற்கும் மேற்பட்ட நகரங்களில், குறிப்பாக அரபு உலகில் இதேபோன்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் செயற்பாட்டாளர்கள் இணைந்துள்ளதாக பங்கேற்பாளர்களிடம் தெரிவித்தார்.
முற்றுகையிடப்பட்ட காஸா மக்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், இயல்பாக்கம் மூலம் மொரோக்கோ இஸ்ரேலை அரசியல் ரீதியாக அங்கீகரிப்பதை எதிர்ப்பதையும் இந்த அணிதிரட்டல் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
டான்ஜியரில் கிட்டத்தட்ட தினசரி நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மக்கள் எதிர்ப்பின் சான்றாக பௌஹ்சினி சுட்டிக்காட்டினார், இயல்பாக்கம் ‘மொரோக்கோ மக்களுக்கு அவமானகரமான செயல்’ எனவும் அப் பெண் செயற்பாட்டாளர் விபரித்தார்..
பாலஸ்தீன ஒற்றுமை சங்கத்தின் உறுப்பினரான கதீஜா சபர், காஸாவின் நிலைமையை ‘நூற்றாண்டின் பேரழிவு’ என விவரித்தார், இந்த மோதல் இனி ஒரு இராணுவ மோதலை ஒத்திருக்காது, மாறாக பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைக்கும் செயற்பாடாகவே இருக்கும் என வலியுறுத்தினார். அமெரிக்காவும் நேட்டோவும் இஸ்ரேலுக்கு தீர்க்கமான ஆதரவை வழங்குவதாகவும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை ‘சிறையில் தள்ள வேண்டிய அட்டூழியங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்’ எனவும் அவர் குற்றம் சாட்டினார்.